வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 44 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது. கடந்த 6-ம் தேதி இரு அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இந்தப்போட்டியில் 6 விக்கெட்டுள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து இரு அணிகள் இடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று அகமதாபாத் மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் எடுத்தது.
238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் அனைவரும் இந்திய அணியின் பந்து வீச்சில் ரன் சேர்க்க முடியாமல் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினர். அணியில் அதிகபட்சமாக ஷர்மர் புரூக்ஸ் 44 ரன்கள் சேர்த்தார். மற்ற அனைவரும் பெரிதாக சோபிக்கவில்லை. இந்நிலையில், 46 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 193 ரன்களை மட்டும் சேர்த்தது. இதன் மூலம் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.








