மாமல்லபுரம் அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது கடலுக்குள் தவறி விழுந்த மீனவர் மாயமான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி காரைக்கால் துறைமுகத்திலிருந்து, நாகை நம்பியார் நகர் கிராமத்தை சேர்ந்த தங்கசாமி உள்ளிட்ட15 பேர், பிரகாஷ் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில், கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். புதுச்சேரி- மாமல்லபுரம் இடையே அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென்று சூறைக்காற்று வீசியது. இதில், விசைப்படகின் பக்கவாட்டில் நின்றிருந்த தங்கசாமி கடலுக்குள் தவறி விழுந்தார்.
உடனடியாக, சக மீனவர்கள் தங்கசாமியைத் தேடினர். ஆனால் தங்கசாமியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து படகு உரிமையாளர் மற்றும் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து இன்று 2-வது நாளாக கூடுதல் படகுகளில் மீனவர்கள் வரவழைக்கப்பட்டு தேடும் பணி தொடர்கிறது. கடந்த மாதம் கடலில் தவறி விழுந்து மீனவர் ஒருவர் மாயமான நிலையில், மீண்டும் ஒருவர் மாயமான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா







