பல்லடம் அருகே அவிநாசிபாளையத்தில் கோவிலுக்கு வந்தவரின் காரை மர்ம நபர்கள் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் செஞ்சேரிமலை பகுதியை சேர்ந்தவர் விவசாயி சதீஷ்குமார். இவர் அவிநாசி பாளையத்தில் உள்ள ராமசாமி பெருமாள் திருக்கோவிலில் நடைபெற்ற புரட்டாசி கடைசி சனிக்கிழமை சிறப்பு பூஜைக்கு தனது குடும்பத்துடன் காரில்
வந்துள்ளார்.
திருச்சி-கோவை தேசிய நெடுஞ்சாலையில் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு சாமி தரிசனம் செய்ய கோவிலுக்குள் சென்றுள்ளனர். பின்னர் வெளியே வந்து பார்த்தபோது வாகனம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சம்பவம் குறித்து சதீஷ்குமார் அவிநாசி பாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் திருச்சி-கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிசிடிவி பதிவுகளை வைத்து அந்த வாகனத்தை திருடி சென்ற நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தனியார் உணவகத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் சதீஷ்குமாரின் காரை மர்ம நபர் சின்னூர் பிரிவு சாலையில் ஓட்டிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்பொழுது வெளியாகி உள்ளது. சிசிடிவி காட்சிகளை வைத்து வாகனத்தை திருடி சென்ற நபர் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கௌரி







