மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் 63 நாயன்மார்கள் திருவிழா பிரம்மாண்டாக நடைபெற்றது.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி உத்திரப் பெருவிழா மார்ச் 28ம் தேதிமுதல் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அறுபத்து மூவர் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
இதனையொட்டி 63 நாயன்மார்கள் புடை சூழ, விநாயகப் பெருமான், கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர், வள்ளி, தெய்வானை சமேத முருகப் பெருமான் ஆகியோர் வீதியுலா வந்தனர். இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்து பேரானந்தம் அடைந்தனர்.
கோலாகலமாக நடைபெற்ற இந்த திருவிழாவை தென்னிந்தியாவுக்கான ஆஸ்திரேலியத் தூதர் சாரா கிர்லீவ் நேரில் கண்டு பரவசம் அடைந்தார். இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது..
”சென்னை மைலாப்பூரில் பங்குனி திருவிழா தேரோட்டத்தையும், வண்ணமயமான உடைகள் மற்றும் கோலங்களையும் பார்த்து பரவசமடைந்தேன். காற்றில் மிதந்த கற்பூர வாசனையும், மல்லிகை மணமும் ஒரு புதிய அனுபவமாக இருந்தது, சென்னையில் ஒரு அருமையான அனுபவம் ” என அவர் தெரிவித்துள்ளார்.
https://twitter.com/AusCGChennai/status/1642846550392193024
அத்துடன் விதவிதமான கோலங்களையும், தேரோட்ட காட்சிகளையும் படம்பிடித்து தங்களுடைய தூதரகத்தின் அதிகாரப்பூர்வமான பக்கத்திலேயே சாரா பதிவிட்டுள்ளார்.
– யாழன்







