தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சிறுமி, தன் அப்பா என்றுமே தோற்கவில்லை என தெரிவித்திருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்று வாரந்தோறும் நீயா நானா என்ற நிகழ்ச்சியை வழங்கி வருகிறது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இந்தவாரம் நடைபெறும் நிகழ்ச்சிக்கான பிரமோவை அந்த தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.
கணவனை விட அதிகம் சம்பாதிக்கும் மனைவி என்ற தலைப்பில் நடைபெறும் இந்தவார நிகழ்ச்சியில், சிறுமி ஒருவர் தன் தந்தையை புகழ்ந்து பேசியது தான் இணையதலங்களில் வைரலாகி வருவதற்கான காரணம். சிறுமியின் குடும்பத்தில் தாய் படிப்பறிவு உள்ளவராகவும், தந்தை படிப்பறிவு குறைந்துள்ளவராகவும் தெரிகிறது. தான் படிக்கவில்லை என்பதால் தன் மகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசை உள்ளதாக அந்த தந்தை நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.
மேலும், தன் மகளுக்கு மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவு உள்ளதாகவும், அதற்கான முழு முயற்சியை தான் செய்து கொடுப்பதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, சிறந்த தந்தைக்கான விருது அவருக்கு வழங்கப்பட்டது. அவரது மகள் அந்த விருதை தந்தைக்கு கொடுத்தார். அப்போது, நிகழ்ச்சி தொகுப்பாளர் அந்த சிறுமியிடம் உங்கள் தந்தை தோற்றுவிட்டதாக அனைவரும் கூறுகிறார்கள் என கேள்வி எழுப்பினார்.
அதற்கு அந்த சிறுமி என் தந்தை என்றைக்குமே தோற்றதில்லை. எங்களுக்காக உழைத்து கொண்டிருக்கிறார் என மழலை குரலில் உருக்காமாக கூறிய வார்த்தைகளை இணைய வாசிகள் தற்போது வைரலாக்கி வருகின்றனர். தாய் பாசம் எல்லாரிடமும் வெளிபட்டு கொண்டுதான் இருக்கிறது. ஆனால் தந்தையின் பாசம் அவ்வளவு எளிதாக வெளியே தெரிவதில்லை. ஆனால் அந்த பாசம் வெளியில் தெரியும்போது, அதனை கண்ணீருடன் கடக்காமல் யாரும் கடந்தது இல்லை என்பதே உண்மை.
-இரா.நம்பிராஜன்








