தமிழ் திரைத்துறையில் வெளியாகியுள்ள படங்களிலேயே இந்த படம் தான் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட படமாக இருக்கும்.
இயக்குநர் ஷங்கர், பிரபல தெலுங்கு ஹீரோ ராம் சரண் நடிக்கும் படத்தையும் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் -2 படத்தையும் இயக்கி வருகிறார். இந்நிலையில் இவர் அடுத்து மிகப்பெரிய பட்ஜெட்டில் நடிகர் சூர்யாவை வைத்து ஒரு படத்தை இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
சூர்யா – சிறுத்தை சிவா படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முழுக்க முழுக்க 3டி தொழில்நுட்பத்தில் வெளிவரும் இப்படத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்திருப்பதை மோஷன் போஸ்டர் வழி அறிய முடிகிறது. இதில் நிறைய VFX காட்சிகள் இருப்பதாகவும், இத்திரைப்படம் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி வருவதாகவும் கூறப்படுகிறது.
இயக்குநர் சிறுத்தை சிவாவின் கனவுப் படம் எனக் கூறப்படும் இப்படத்தை 2 பாகங்களாக 10 மொழிகளில் வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது. சென்னை, கோவா உள்ளிட்ட இடங்களில் இப்படத்திற்கான படப்பிடிப்பு நடைபெறுகிறது.இதனால் இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெறும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் இயக்குநர் ஷங்கர் மதுரை எம்.பி சு வெங்கடேசன் எழுதிய வேள்பாரி என்ற நாவலை மையமாக வைத்து புதிய படம் ஒன்றை இயக்கத்திட்டமிட்டுள்ளதாகவும் அதில் சூர்யாவைக் கதையின் நாயகனாக நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த புதிய படத்தின் பட்ஜெட் சுமார் 1000 கோடி எனவும் கூறப்படுகிறது.
இந்த தகவல் உறுதியாக்கும்பட்சத்தில் தமிழ் திரைத்துறையில் வெளியாகியுள்ள படங்களிலேயே இந்த படம் தான் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட படமாக இருக்கும் எனவும், சூர்யா – சிறுத்தை சிவா படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதையாக இருக்கும் எனவும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.







