ஐஎஸ்எல் கால்பந்து 2026-27: சென்னை – கேரளா இடையிலான விறுவிறுப்பான போட்டி சமனில் முடிந்தது!

ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் விறு விறுப்பாக நடைபெற்ற சென்னையின் எஃப்சி – கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி இடையிலான கால்பந்தாட்டம் கோல் எதுவுமின்றி சமனில் முடிந்தது.

செய்தியைக் கேட்க
AI குரல் வடிவம்
0:00 –:–

13-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் லீக் ஆட்டங்கள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் கொல்கத்தாவும், இரண்டாம் இடத்தில் நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அணி இரண்டாம் இடத்திலும் ஆதிக்கம் செலுத்திவருகின்றனர்.

இந்த நிலையில் இன்று சென்னை நேரு விளையாட்டரங்கில் தனது சொந்த மண்ணில் நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி அணி, கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி அணியுடன் மோதியது. விறுவிறுப்பான இந்த தென்னக டர்பி (Southern Derby) போட்டி கோல் எதுவுமின்றி (0-0) சமனில் முடிந்தது.

மெரினா மச்சான்ஸ் என்று அழைக்கப்படும் சென்னையின் எஃப்சி வீரர்கள் தொடக்கம் முதலே அபாரமான தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கேரள அணியின் கோல்கீப்பர் அம்ரீந்தர் சிங்குக்கு தொடர்ச்சியாக நெருக்கடி கொடுத்து பல அருமையான கோல் வாய்ப்புகளை உருவாக்கிய போதிலும், இரு அணிகளாலும் கோல் கணக்கைத் தொடங்க முடியவில்லை.

ஆட்டத்தின் தொடக்கத்தில் இரு அணிகளும் சமபலத்துடன் மோதினாலும், நேரம் செல்லச் செல்ல சென்னையின் எஃப்சி ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. போட்டியின் 17-வது நிமிடத்தில் இர்ஃபான் யத்வாத்துக்கு கிடைத்த வாய்ப்பு நூலிழையில் நழுவியது. அதைத் தொடர்ந்து கிடைத்த கார்னர் கிக்கில் அடிக்கப்பட்ட ஹெட்டர் இலக்கை தவறவிட்டது. நடுகளத்தில் மாதிஹ் தலால் ஆட்டத்தை வழிநடத்த, சென்னை அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தியது.
31-வது நிமிடத்தில் மாதிஹ் தலால் பாக்ஸுக்கு வெளியே இருந்து அடித்த பந்தை அம்ரீந்தர் தடுத்தார். அடுத்த நான்காவது நிமிடத்தில் இர்ஃபானின் ஷாட்டையும் சிறப்பான முறையில் தடுத்து நிறுத்தினார். 38-வது நிமிடத்தில் நிகோலா ஸ்டோயனோவிச் அடித்த பந்து கோல் போஸ்ட்டை ஒட்டி வெளியேறியது. முதல் பாதியின் இறுதிக் கட்டத்தில் ப்ரைசன் பெர்னாண்டஸ் அடித்த ஹெட்டரும் இலக்கை எட்டவில்லை. முதல் பாதியில் சென்னை அணி 6 முறை கோல் முயற்சியிலும், 7 கார்னர் கிக்களையும் பெற்றது; ஆனால், கேரளா ஒருமுறை கூட கோல் போஸ்ட்டை நோக்கி அடிக்கவில்லை.

இரண்டாவது பாதியில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி சுதாரித்துக் கொண்டு தீவிரமாக விளையாடியது. ஆட்டத்தின் 50-வது நிமிடத்தில், கேரள வீரர்களின் முறையீட்டைத் தொடர்ந்து நடுவர் அவர்களுக்கு பெனால்டி வாய்ப்பை வழங்கினார். ஆனால், கேரள கேப்டன் அட்ரியன் லூனா அடித்த பெனால்டி ஷாட் கோல் போஸ்ட்டில் பட்டு வெளியேறியதால், சென்னை அணி தப்பியது.
அடுத்த சில நிமிடங்களிலேயே (54-வது நிமிடம்) ஆண்ட்ரே கிரீன் அடித்த பந்தை சென்னையின் கோல்கீப்பர் முகமது நவாஸ் அபாரமாக தடுத்தார். தொடர்ந்து இரு அணிகளும் கோல் அடிக்கத் தீவிரமாக முயன்றன. 67-வது மற்றும் 68-வது நிமிடங்களில் இர்ஃபான் அடித்த அபாரமான ஷாட்களை கேரள கீப்பர் அம்ரீந்தர் சிங் மீண்டும் தடுத்து நிறுத்தினார்.

ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் உச்சக்கட்ட பரபரப்பு நிலவியது. 89-வது நிமிடத்தில் சென்னை வீரர் நேருக்கு நேராக அடித்த கோல் வாய்ப்பையும் அம்ரீந்தர் மாயாஜாலமாக தடுத்தார். அதைத் தொடர்ந்து கூடுதல் நேரத்தில் இரு அணி வீரர்களிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் வெடித்தது. இதன் காரணமாக நடுவர் சென்னையின் இம்மானுவேல் இமானிஷிம்வே மற்றும் கேரளாவின் ஆண்ட்ரே கிரீன் ஆகிய இருவருக்கும் நேரடி சிவப்பு அட்டை (Red Card) வழங்கி வெளியேற்றினார். தலா 10 வீரர்களுடன் விளையாடிய இரு அணிகளும் நான்கு நிமிட கூடுதல் நேரத்திற்குப் பிறகு கோல் ஏதுமின்றி சமனில் ஆட்டத்தை முடித்தன.

சென்னையின் எஃப்சி அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் நவம்பர் 7 அன்று ஈஸ்ட் பெங்கால் எஃப்சி அணியை எதிர்கொள்கிறது. சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கிலேயே நடைபெறவுள்ள அந்தப் போட்டியில், இந்த சீசனின் முதல் வெற்றியைப் பதிவு செய்யும் முனைப்புடன் அணி களம் காணும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.