தமிழக அரசு ஊழியர்கள் தங்களது சொத்துகள் மற்றும் கடன் விவரங்களை ஆண்டுதோறும் அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும். இதற்காக தமிழ்நாடு அரசு பணியாளர்கள் நடத்தை விதிகள், 1973-ல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டமான IFHRMS இணையதளம் வாயிலாக சொத்து விவரங்களைத் தாக்கல் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி, அரசு ஊழியர்கள் தங்களிடம் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகள், கடன்கள் உள்ளிட்ட பிற பொறுப்புகள் குறித்த விவரங்களை ஆண்டுதோறும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இணையவழியில் சமர்ப்பிக்க வேண்டும்.
டிசம்பர் 31 வரை அவகாசம் நீட்டிப்பு
2025 டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த காலண்டர் ஆண்டுக்கான சொத்து மற்றும் கடன் விவரங்களை, IFHRMS இணையதளம் வாயிலாக 2026 அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என ஏற்கெனவே தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், சொத்து விவரங்களைத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு அரசு ஊழியர் அமைப்புகள் சார்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இதனைப் பரிசீலித்த தமிழக அரசு, சொத்து விவரங்களைத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. அதன்படி, 2026 டிசம்பர் 31-ஆம் தேதி வரை அரசு ஊழியர்கள் தங்களது சொத்து விவரங்களைத் தாக்கல் செய்யலாம்.
இதுதொடர்பாக தமிழக அரசின் மனிதவள மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் சி. சமயமூர்த்தி, அனைத்து அரசுத் துறை செயலாளர்கள், துறைத் தலைவர்கள், மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்டோருக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். மேலும், தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் பணிபுரியும் அரசு ஊழியர்கள் நீட்டிக்கப்பட்ட கால அவகாசத்திற்குள் சொத்து மற்றும் கடன் விவரங்களைத் தவறாமல் தாக்கல் செய்வதை உறுதிப்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார்.




