உத்தரப் பிரதேசத்தில் ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிடக்கோரி தனது தந்தையை தாக்கியவர்களிடம் இஸ்லாமிய சிறுமி கெஞ்சும் வீடியோ சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க இஸ்லாமியரை ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிடக்கோரி சிலர் தாக்கியுள்ளனர். அவருடன் இருந்த சிறுமி தனது தந்தையை தாக்க வேண்டாம் என வன்முறையாளர்களிடம் கெஞ்சும் வீடியோ சமூக வலைத்தளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறையினரிடம் இஸ்லாமிய நபர் ஒப்படைக்கப்பட்டபோதும் சிலர் அவரை தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் வலதுசாரி அமைப்பான பஜ்ரங் தள் அமைப்பின் கூட்டம் நடந்த இடத்திலிருந்து 500மீ தொலைவில் அரங்கேறியுள்ளது. இப்பகுதியில் இஸ்லாமியர்கள் இந்து பெண்களை தங்கள் மதத்திற்கு மாற்றுவதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த சம்பவத்தையடுத்து 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கான்பூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு முன்னதாக ஏற்கெனவே ஒரு இந்து குடும்பத்துடன் இந்த இஸ்லாமிய குடும்பத்திற்கு சர்ச்சை நீடித்து வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இரு குடும்பத்தினரும் பரஸ்பரம் குற்றம்சாட்டிக்கொண்டனர். வழக்குப்பதிவும் செய்யப்பட்டிருக்கிறது.








