தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் உயிரிழந்த மூர்த்தி யானைக்கு பாகன், கிராம மக்கள் உள்ளிட்டோர் கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினர்.
முதுமலை புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ள தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு
முகாமில் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்த மூர்த்தி என்ற தந்தம் இல்லாத ஆண் மக்னா யானைக்கு முதுமலை புலிகள் காப்பக கள இணை இயக்குனர் வித்யா,
வனத்துறையினர் மற்றும் கிராம மக்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
கேரளா அரசால் ஆட்கொல்லி யானையாக அறிவிக்கப்பட்டு சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்ட நிலையில், தமிழக வனத்துறையினர் மையக்க ஊசி செலுத்தி பிடித்து 25 வருடங்களுக்கு மேலாக பராமரித்து வந்த மூர்த்தி யானை உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
1998ல் கேரளாவில் 23க்கும் மேற்பட்டவர்களை கொன்றதால், கேரளா அரசு இந்த யானையை சுட்டுக் கொள்ள கேரளா அரசு வனத்துறைக்கு உத்தரவிட்டது. அப்போது இந்த யானை தமிழ்நாட்டு எல்லையான கூடலூர் அருகே உள்ள புளியம்பாறை பகுதிக்குள் நுழைந்தபோது ஐந்து கும்கி யானைகள் உதவியுடன் 70க்கும் மேற்பட்ட வனத்துறையினர் போராடி எட்டு நாள் போராட்டத்திற்குப் பிறகு தமிழ்நாடு வனத்துறையினர் இந்த யானையை பிடித்து மூர்த்தி என பெயர் சூட்டி முதுமலை புலிகள் காப்பகத்திற்கு கொண்டு வந்து ,கும்கி பயிற்சி அளித்தது.
இந்த யானையை 25 ஆண்டுகளுக்கு மேலாக தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் பராமரிக்கப்பட்ட வந்த நிலையில் இந்த யானை நேற்றிரவு உடல்நல குறைவால் உயிரிழந்தது. இச்சம்பவம் வனத்துறையினர் மற்றும் யானையை பராமரித்து வந்த பழங்குடியினத்தைச் சேர்ந்த பாகங்கள் மற்றும் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் உயிரிழந்த மூர்த்தி யானைக்கு முதுமலை புலிகள் காப்பக கள இணை இயக்குனர் வித்யா மற்றும் வனத்துறையினர் அதேபோல் யானையை பராமரித்து வந்த
பழங்குடியினத்தைச் சேர்ந்த பாகன்கள் அவர்களது குடும்பத்தினர் மற்றும் கிராம
மக்கள் யானையின் உடலுக்கு மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் அஞ்சலி
செலுத்தினர்.
இந்நிலையில் முதுமலை யானைகள் வளர்ப்பு முகாமில் சாதுவான யானையாக 25 வருடங்களாக பராமரிக்கப்பட்டு வந்த மூர்த்தி யானை உயிரிழந்த சம்பவம் வனத்துறையினர் மட்டுமல்லாமல் அதனை பராமரித்து வந்த பழங்குடியின பாகன்கள் மற்றும் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.







