சென்னையை அடுத்த ஆவடி மேல்பாக்கம் கிராமத்தில், முதல் மனைவியுடன் உறவை துண்டிக்க கோரி நடந்த தகராறில், 2-வது மனைவியை அடித்து கொன்ற கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆவடி அடுத்த கண்ணன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மதன். அப்பகுதியில் இறைச்சி கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமான நிலையில், சரிதா என்பவரை 2 ஆண்டுகளுக்கு முன்பு, இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக மதனுடன், அவரது முதல் மனைவியின் மகள் சங்கீதா, செல்போனில் தொடர்பு கொண்டு அடிக்கடி பேசி வந்துள்ளார். இந்த தகவல் சரிதாவுக்கு தெரிந்து ஆத்திரம் அடைந்துள்ளார். இதுதொடர்பாக, கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த மதன் இரும்பு கம்பியால் சரிதாவின் தலையில் தாக்கி கொலை செய்துவிட்டு, 8 மாத கைக்குழந்தையுடன் தப்பியோடியதாக கூறப்படுகிறது. தனது தாயை இரும்பு பைப்பால் தந்தை தாக்குவதை கண்ட 8 வயது சிறுமி, அக்கம்பக்கத்தில் உதவி கேட்டும், யாரும் வரவில்லை, என வேதனையுடன் கூறினார்.







