நாட்டில் செமஸ்டர் கல்வி முறையை அறிமுகப்படுத்தியவரும் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான அனந்த கிருஷ்ணன் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை பூர்வீகமாக கொண்டவர் அனந்த கிருஷ்ணன். மத்திய சாலை ஆராய்ச்சிக் கழகத்தின் முதுநிலை அறிவியல் அலுவலராகவ பணியாற்றியவர். பின்னர் கான்பூர் ஐஐடியின் தலைவராக பணியாற்றினார்.
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர், தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தின் தலைவர் என பல்வேறு பொறுப்புகளை வகித்த அனந்தகிருஷ்ணன் கடந்த சில தினங்களாக நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். அவருக்கு வயது 93. நாட்டில் செமஸ்டர் கல்வி முறையை கொண்டு வந்தவர்என புகழப்படும் அனந்தகிருஷ்ணன் இணையத்தில் தமிழ் மொழியை பயன்படுத்துவதற்கான செயல்பாடுகளுக்காக பெரிதும் பங்காற்றியவர்.
இவரது கல்வி சேவையை பாராட்டி கடந்த 2002-ஆம் ஆண்டு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.







