நாட்டில் 88 சதவீதமான சுயதொழில் மற்றும் குறு, சிறு நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவித்த நிதி உதவி கிடைக்காமல் காத்திருப்பதாக இந்தியச் சங்கங்களின் கூட்டமைப்பு (சிஐஏ ) நடத்திய கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சுயதொழில் மற்றும் குறு, சிறு நிறுவனங்களுக்கு மத்திய அரசு சார்பில் நிதி உதவித் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்தியச் சங்கங்களின் கூட்டமைப்பு (சிஐஏ ) மற்றும் சுயதொழில் மற்றும் குறு, சிறு நிறுவனங்களின் கூட்டமைப்பு சார்பில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட நிறுவனங்களிடம் கருத்துக்கணிப்பு மேற்கொண்டது.
இந்த கருத்துக்கணிப்பு 81 ஆயிரம் சுயதொழில் மற்றும் குறு, சிறு நிறுவனங்களிடம் மேற்கொள்ளப்பட்டது. கொரோனா முதல் அலை மற்றும் கொரோனா இரண்டாவது அலை காரணமாகக் கடந்த 15 மாதங்களாக இந்த தொழில் நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்துவருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவற்றில் 73 சதவீதமான சுயதொழில் மற்றும் குறு,சிறு நிறுவனங்கள் கடந்த 15 மாதங்களில் எந்த லாபமும் ஈட்டவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 42 சதவீதமான நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களை பணியில் வைக்கலாமா? வேண்டாமா? என்ற மனநிலையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். மேலும் 59 சதவீதமான நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களை பணியிலிருந்து நீக்கியுள்ளதாக இந்த கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியச் சங்கங்களின் கூட்டமைப்பு (சிஐஏ ) சுயதொழில் மற்றும் குறு, சிறு நிறுவனங்களின் கூட்டமைப்பு மேற்கொண்ட இந்த கணக்கெடுப்பில் சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் சுயதொழில் மற்றும் குறு, சிறு தொழில் நிறுவனங்களைப் பாதுகாத்தால், அவர்களுக்குத் தேவையான கடன் வழங்குதல், கடனுக்கான வட்டி விகிதத்தைக் குறைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகளிடம் வழங்கியுள்ளது.
அதேபோல் மாநிலங்களில் உள்ள சுயதொழில் மற்றும் குறு,சிறு நிறுவனங்களுக்குக் கடன் வழங்கும் வங்கிகளின் தரவுகளை ஒன்றிணைத்து வழங்க இந்தியச் சங்கங்களின் கூட்டமைப்பு (சிஐஏ ) முடிவு செய்துள்ளது.







