திருவொற்றியூர் அருகே கேம் விளையாடிய போது, தாய் செல்போனை மறைத்து வைத்ததால் பள்ளி மாணவன் உயிரை மாய்த்துக் கொண்ட துயர சம்பவம் அரங்கேறியுள்ளது.
சென்னை திருவொற்றியூர் வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த சிவா என்பவரது மகன் விமல்குமார். இவர் கொண்டி தோப்பில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், விமல்குமார் வீட்டில் செல்போனில் கேம் விளையாடி வந்துள்ளார். இதனால் அவரது தாய் கண்டித்ததோடு, செல்போனை பறித்து, மறைத்து வைத்ததாகவும் கூறப்படுகிறது.
இதன் பின்னர், மாணவனின் தாய் வெளியே சென்று வீடு திரும்பியபோது, மகன் விமல்குமார் தூக்கிட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அருகில் இருப்பவர்களின் உதவியுடன் மாணவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது, சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







