மோா்பி பால விபத்து: 7 பேரின் ஜாமீன் மனுக்கள் நிராகரித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

குஜராத்தின் மோர்பி நகரில் தொங்கு பாலம் இடிந்து விழுந்து 135 பேர் உயிரிழந்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட ஏழு பேரின் ஜாமீன் மனுக்களை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் நிராகரித்தது. குஜராத் மாநிலம் மோர்பி…

குஜராத்தின் மோர்பி நகரில் தொங்கு பாலம் இடிந்து விழுந்து 135 பேர் உயிரிழந்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட ஏழு பேரின் ஜாமீன் மனுக்களை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் நிராகரித்தது.

குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே உள்ள பழமையான தொங்கு பாலம் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 135 -பேர் உயிரிழந்தனர். 100 ஆண்டுகள் பழமையான இந்த பாலத்தில், புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 26-ம் தேதி மீண்டும் திறக்கப்பட்டு பொது பயன்பாட்டுக்கு வந்தது. குஜராத் மக்களுக்கான புது வருட தொடக்கத்துடன் இணைந்து பாலம் திறப்பு நிகழ்ச்சியும் நடந்தது.

இதையடுத்து விடுமுறை தினமான அக்டோபர் 30-ம் தேதி ஏராளமானோர் அந்த பாலத்தில் திரண்டு, புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர் . அப்போது எதிர்பாராதவிதமாக, அந்த பாலம் பாரம் தாங்காமல் அறுந்து விழுந்தது. இதில், 135 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள காவல்துறை உயர் அதிகாரி தலைமையில் ஒரு குழு அமைத்து குஜராத் அரசு உத்தரவிட்டது. இந்த வழக்கில் ஓரேவா குழுமத்தின் நிர்வாக இயக்குனர் ஜெயசுக் படேல் முதன்மை குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.

ஜெயசுக் படேலுடன் சேர்ந்து, பாலத்தை புதுப்பிக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த, கட்டுமான நிறுவனத்தை சேர்ந்த இரண்டு மேலாளர்கள், இரண்டு டிக்கெட் புக்கிங் கிளார்க்குகள், மூன்று பாதுகாவலர்கள் மற்றும் ஓரேவா குழுமத்தின் பழுதுபார்க்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த இரண்டு துணை ஒப்பந்ததாரர்கள் என மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் ஓரேவா குழுமத்தின் நிர்வாக இயக்குனர் ஜெய்சுக் படேல், கைது செய்யப்படுவதற்கு முன்பு பிப்ரவரி 1- ஆம் தேதி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

இதையடுத்து இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 10 பேர் மீதான 1,262 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையை மோர்பி காவல்துறை கடந்த வாரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த நிலையில் தான் கைது செய்யப்பட்ட 09 பேரும் குஜராத் நீதிமன்றம், கீழமை நீதிமன்றம் ஆகியவற்றில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தனர்.

ஆனால் குஜராத் நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றம் ஆகியவை இந்த 09 பேரின் ஜாமீன் மனுக்களை நிராகரித்து விட்டது. இதனால் கைது செய்யப்பட்ட துணை ஒப்பந்ததாரர்கள் 02 பேரை தவிர்த்து மீதமுள்ளவர்கள் மோர்பி மாவட்ட முத்தன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி பி.சி. ஜோஷி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி ஜோஷி உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துதல், அலட்சியம், கொலை குற்றம் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் ஜாமின் வழங்க முடியாது என மறுப்பு தெரிவித்து, மனுவை நிராகரித்து உத்தரவிட்டார்.

  • பி. ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.