சிலியில் காட்டுத் தீயில் சிக்கி 22 பேர் பலி: சர்வதேச நாடுகள் உதவிக்கரம் நீட்ட கோரிக்கை

தென் அமெரிக்க நாடான சிலியில் காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.  பலரது வீடுகளும், ஆயிரக்கணக்கான ஏக்கர் வனப் பகுதியும் தீயில் சிக்கி அழிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடும் வெப்பமும்,…

தென் அமெரிக்க நாடான சிலியில் காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. 

பலரது வீடுகளும், ஆயிரக்கணக்கான ஏக்கர் வனப் பகுதியும் தீயில் சிக்கி அழிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடும் வெப்பமும், பலத்த காற்றும் வீசுவதே காட்டுத் தீ ஏற்படக் காரணம் எனக் கூறப்படுகிறது.

தென் அமெரிக்காவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பம் நிலவுவதால் பல இடங்களில் வெப்ப காற்று வீசுகிறது. இதனால், நாடு முழுதும் 150க்கும் மேற்பட்ட வனப் பகுதிகளில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இங்கு, 34 ஆயிரத்து 600 ஏக்கர் பரப்பளவில் தீ பரவி வரும் நிலையில், இதைக் கட்டுப்படுத்த விமானம் வாயிலாக ரசாயனம் தெளிப்பது உட்பட பல்வேறு முயற்சிகளை சிலி அரசு மேற்கொண்டுள்ளது.

 

இதுகுறித்து உள்துறை அமைச்சர் கரோலினா தோஹா சனிக்கிழமை கூறுகையில், காட்டுத் தீ பரவும் பகுதிகளில் உள்ள 1,429 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். காட்டுத் தீயில் சிக்கி 554க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 22 பேர் வரை உயிரிழந்துள்ளனர். 16 பேர் பலத்த தீக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் உள்ளனர். மேலும், காட்டுத் தீ காரணமாக சுமார் 14,000 ஹெக்டேர் நிலம் எரிந்து சேதமாகியுள்ளது. சிலியின் பாதிக்கப்பட்ட பல பகுதிகளில் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது என்றார்.

இந்நிலையில் ஜனாதிபதி கேப்ரியல் போரிக் தனது ட்விட்டர் பதிவில், சர்வதேச நாடுகள் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், அண்டை நாடான அர்ஜென்டினா, சிலியின் தென் மத்தியப் பகுதியில் எரியும் தீயை எதிர்த்துப் போராட தீயணைப்பு வீரர்களையும், இயந்திரங்களையும் அனுப்பும் என்றும், காட்டுத்தீக்கு எதிரான இந்தப் போராட்டத்துக்கு உதவியதற்காக அர்ஜென்டினாவிற்கு நன்றியையும் தெரிவித்துள்ளார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.