ம.பி.யில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500, ரூ.500-க்கு சமையல் எரிவாயு – பிரியங்கா காந்தி வாக்குறுதி!

இந்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத்தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் பெண்களுக்கு மாத உதவித்தொகை ரூ1500, ரூ500 க்கு சமையல் எரிவாயு மற்றும் 100 யூனிட் இலவச மின்சாரம் ஆகியவை நிறைவேற்றப்படும் என காங்கிரஸ் கட்சியின்…

இந்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத்தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் பெண்களுக்கு மாத உதவித்தொகை ரூ1500, ரூ500 க்கு சமையல் எரிவாயு மற்றும் 100 யூனிட் இலவச மின்சாரம் ஆகியவை நிறைவேற்றப்படும் என காங்கிரஸ் கட்சியின் பொதுசெயலாளர் பிரியங்கா காந்தி வாக்குறுதி அளித்தார்.

பாஜக ஆட்சி நடைபெறும் மத்தியப்பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. கா்நாடகத்தில் ஆட்சியைக் கைப்பற்றிய உற்சாகத்தில் மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் களமிறங்கியுள்ளது. மத்தியப்பிரதேசத்தின் ஜபல்பூரில் காங்கிரஸ் பொதுச் செயலாளா் பிரியங்கா காந்தி தலைமையில் நேற்று பிரச்சாரம் நடைபெற்றது.

அப்போது அவர் பேசியதாவது:

மத்தியப்பிரதேசத்தில் பாஜக ஆட்சியில் மாதம்தோறும் ஒரு ஊழல் வெளிப்பட்டு வருகிறது. இதுவரை பாஜக 220 மாதங்கள் ஆட்சியில் இருந்துள்ளது. 225 ஊழல்கள் வெளிப்பட்டுள்ளன. வியாபம் ஊழல், ரேஷன் விநியோகத்தில் ஊழல், நிலக்கரி சுரங்க ஏலத்தில் ஊழல், கொரோனா காலகட்ட மருத்துவ சேவையின்போது ஊழல் என அடுக்கிக் கொண்டே போகலாம்.

கடவுள் விஷயத்தில் கூட முதல்வா் சிவராஜ் சிங் சௌஹான் ஊழலில் ஈடுபட்டுள்ளாா். உஜ்ஜைன் கோயிலில் 6 கடவுள் சிலைகள் கடும் காற்றால் கீழே விழுந்து உடைந்து சேதமடைந்தன. இதற்கு கோயில் கட்டுமானப் பணியில் பாஜக அரசு செய்த ஊழல்தான் காரணம் என்று அவர் தெரிவித்தார்.

அதே நேரத்தில் ராஜஸ்தான், ஹிமாசல பிரதேசம், சண்டீகா், கா்நாடகம் என காங்கிரஸ் ஆட்சியில் உள்ள மாநிலங்களில் மக்கள் நலன் சாா்ந்த திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. 3 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. கா்நாடகத்தில் 5 பிரதான வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

மேலும், மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதந்தோறும்  ரூ.1,500 உதவித்தொகை வழங்கப்படும். சமையல் எரிவாயு சிலிண்டா் ரூ.500-க்கு வழங்கப்படும், மாதம்தோறும் வீட்டுப் பயன்பாட்டுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக அளிக்கப்படும். விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். அரசு ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என்றும் பிரியங்கா காந்தி வாக்குறுதி அளித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.