“ஆந்திராவை நோக்கி நகரும் மொந்தா புயல்” – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேட்டி!

உபரிநீர் திறந்து விடும்போது அசம்பாவிதம் நடக்காத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்கிறோம் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த 16ஆம் தேதி துவங்கியது. வருவாய்த்துறை கணக்குபடி அக்டோபர் 1 முதல் 28 செ.மீ வைத்துள்ளது. இது இயல்பை விட அதிகம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள மொந்தா புயல் சென்னையை நோக்கி வருவதாக முதலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அது ஆந்திராவை நோக்கி நகர்வதாக கூறப்பட்டுள்ளது. இருப்பினும் அதன் ஒரு பகுதியாக, சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் பெரிய அளவில் மழை பெய்யக்கூடும். அந்த மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

உபரிநீர் திறந்து விடும்போது அசம்பாவிதம் நடக்காத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்கிறோம். நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. தேவையான பொருட்களை மக்களுக்கு வழங்குவதற்கு தயாராக உள்ளோம்.

நெல் கொள்முதல் இழப்பீடு தொகை வழங்க சேதமடைந்த பகுதியின் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. வடகிழக்கு பருவமழையை சாமர்த்தியமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையாள்வார். கடந்த 1ஆம் தேதியில் இருந்து 25ஆம் தேதி வரை மனித உயிரிழப்புகள் 31ஆகவும், காயமடைந்தவர்கள் 47ஆகவும், அதிகபட்சமாக கடலூரில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 2 முகாம்களில் 210 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு ஏற்பாடு செய்யப்பட்ட முகாம்கள் அனைத்தும் இந்த ஆண்டும் தயார் நிலையில் உள்ளது. இரண்டு ரேடார்கள் வாங்குவதற்கு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.