ரஜினிகாந்த் பவுண்டேஷன் பெயரில் போலி facebook பக்கத்தை தொடங்கி பண மோசடி நடப்பதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.
சமூக வலைதளங்கள் வாயிலாக பண மோசடி நடப்பது தற்போதைய டெக் உலகில் சர்வ சாதரணமாகிவிட்டது. வாட்ஸ் ஆப்பில் தெரியாத நபர்கள் போன் செய்து ரகசிய தகவல்களை அபகரித்து மோசடி செய்வது, வங்கியில் இருந்து பேசுவதாக கூறி தனிப்பட்ட தகவல்களை பெற்று வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருடுவது, செல்போன்களில் லிங்குகளை அனுப்பி அதனை தொட்டால், அவரின் செல்போனை முடக்கி மொத்த தகவலையும் கைப்பற்றி பண மோசடி செய்வது என விதவிதமாக மோசடி நடக்கிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுமட்டுமல்லாது facebook – ல் போலி கணக்குகளை தொடங்கி அவர்களின் நண்பர்களிடம் facebook வாயிலாகவே கடன் கேட்டு மோசடி செய்வதும் தற்போது பரவலாக நடக்கும் ஆன்லைன் பண மோசடிகளில் முக்கியமான ஒன்று. நண்பர் தான் facebook வாயிலாக கடன் கேட்கிறார் என்று நம்பி மோசடி கும்பலிடம் பணம் கொடுத்து ஏமாந்தோர் ஏராளம்.
இப்படி அனைத்து விவகாரங்கள் குறித்தும் விழிப்புணர்வு இருந்தாலும் சில நேரங்களில் பணத்தை இழக்கும் வகையில் ஆன்லைன் மோசடிகள் அதிகமாகவே நடந்து வருகிறது.
இந்நிலையில், ரஜினிகாந்த் பெயரை பயன்படுத்தி facebook வாயிலாக ஒரு கும்பல் ரு.2 கோடி வரை வசூலித்து மோசடி செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஜினிகாந்த் பவுண்டேஷன் பெயரில் போலி முகநூல் பக்கத்தை உருவாக்கிய கும்பல் அதன் வாயிலாக பலரிடம் ரூ.2 கோடி வரை பணம் வசூலித்திருக்கிறது. இது குறித்து ரஜினிகாந்த் பவுண்டேஷன் அறங்காவலர் சிவராமகிருஷ்ணன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்திருக்கிறார். அதில் ரூ.2 கோடி வசூல் செய்து 200 பேர் குலுக்கள் முறையில் பரிசு வழங்கப்படுவதாக மோசடி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.