மக்களவையில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி சோமு எழுத்துபூர்வமாக விளையாட்டு வீரர்களுக்கான பண்டிட் தீன்தயாள் உபாத்யாய் தேசிய நல நிதி குறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூரிடம் விளையாட்டு வீரர்களுக்கான பண்டிட் தீன்தயாள் உபாத்யாய் தேசிய நல நிதி பற்றி மக்களவையில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி சோமு பின்வருமாறு கேள்விகளை எழுத்துப்பூர்வமாக எழுப்பியிருந்தார்.
- பண்டிட் தீன்தயாள் உபாத்யாய் தேசிய நல நிதி (PDUNWF) விளையாட்டு வீரர்களுக்கு உதவி வழங்குவதற்காக அரசாங்கத்தால் நிறுவப்பட்டுள்ளதா?அப்படியானால், அதன் நோக்கங்கள் என்ன?
- கடந்த ஐந்தாண்டுகளில் மாநிலம் மற்றும் விளையாட்டு வாரியாக இந்த நிதியிலிருந்து பயனடைந்த விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கை மற்றும் நிதியை நிர்ணயம் செய்வதற்கான அளவுகோல்கள் என்ன?
- பல பதக்கம் வென்ற விளையாட்டு வீரர்கள் பொருளாதார ரீதியாக மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அரசு அறிந்திருக்கிறதா?
- அவ்வாறாக அறிந்திருந்தால், அதன் விவரங்கள் மற்றும் இந்த நிதியில் இருந்து வீரர்களுக்கு நிதியுதவி வழங்க அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?
இவ்வாறான கேள்விகளை கனிமொழி சோமு முன்வைத்திருந்தார். இந்த கேள்விகளுக்கு மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் எழுத்து மூலமாக பதில் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
- விளையாட்டு வீரர்களுக்கான பண்டிட் தீன்தயாள் உபாத்யாய் தேசிய நல நிதி (PDUNWFS) திட்டத்தை அரசாங்கம் பின்வரும் நோக்கங்களுடன் செயல்படுத்துகிறது.
- தற்போது ஆதரவற்ற சூழ்நிலையில் வாழும் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு தகுந்த உதவிகளை வழங்குதல்.
- போட்டிகளுக்கான பயிற்சியின் போது மற்றும் போட்டிகளின் போது காயமடைந்த விளையாட்டு வீரர்களுக்கு காயத்தின் தன்மையைப் பொறுத்து பொருத்தமான உதவிகளை வழங்குதல்.
- மருத்துவ சிகிச்சைக்காக விளையாட்டு வீரர்களுக்கு தகுந்த உதவிகளை வழங்குதல்.
- பொதுவாக விளையாட்டு வீரர்களின் நலனை மேம்படுத்துவதற்கு தகுந்த உதவிகளை வழங்குவது, அவர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்துள்ளவர்கள் அவலநிலையில் உள்ள துயரங்களைத் தணிப்பதற்காக பயன்படுத்துதல்.
- வசதியற்ற சூழ்நிலையில் வாழும் விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி, விளையாட்டு உபகரணங்களை வாங்குதல், தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளில் பங்கேற்பது போன்றவற்றுக்கு உதவுதல்.
- கடந்த ஐந்தாண்டுகளில் மாநில வாரியாக மற்றும் விளையாட்டு வாரியாக இந்த நிதியில் பயனடைந்த விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கை குறித்த தகவல்கள் விளையாட்டுத் துறையின் இணையதளமான https://yas.nic.in இல் கிடைக்கின்றன.
- ஆதரவற்ற சூழ்நிலையில் வாழும் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ரூ.5 லட்சம் வரை நிதி உதவி மற்றும் விளையாட்டு வீரர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்காக ரூ.10 லட்சம் வரை PDUNWFS திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.
இவ்வாறு மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் பதிலளித்துள்ளார்.







