மோகன்லால் நடித்து மூன்று தேசிய விருதுகளைப் பெற்றுள்ள ’மரைக்கார்:அரபிக்கடலிண்டே சிம்ஹம்’ என்ற வரலாற்றுப் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அதன் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
பிரியதர்ஷன் இயக்கத்தில், மெகா பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் வரலாற்றுப் படம், ’மரைக்கார்: அரபிக்கடலிண்டே சிம்ஹம்’. மலையாளத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் ரிலீஸ் ஆகிறது. தமிழில், இந்தப் படத்துக்கு ’மரைக்காயர்: அரபிக்கடலின் சிங்கம்’ என்று டைட்டில் வைத்துள்ளனர். இந்தப் படத்தைத் தமிழில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு வெளியிடுவதாக அறிவித்திருந்தார்.
16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கேரள கடற்படை தலைவரான குஞ்சாலி மரைக்காயரின் வரலாறாக இந்தப் படம் உருவாகியுள்ளது. குஞ்சாலி மரைக்கார், கடல் அனுபவம் கொண்ட வீரர்களை ஒன்று திரட்டி, கடற்படையை உருவாக்கி, போர்த்துக்கீசியர்களுக்கு எதிராகப் போராடியவர். இதில், குஞ்சலி மரைக்காயராக மோகன்லால் நடித்திருக்கிறார். கீர்த்தி சுரேஷ், பிரபு, சுகாசினி, சுனில் ஷெட்டி, அர்ஜுன், மஞ்சு வாரியர், சித்திக் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் கடந்த வருடம் மார்ச் 26 ஆம் தேதி ரிலீஸ் ஆவதாக இருந்தது. கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. பிறகு நான்கு முறை ரிலீஸ் தேதி அறிவித்தும் ரிலீஸ் செய்ய முடியவில்லை.
இந்நிலையில் கேரளாவில் 50 சதவிகித இருக்கைகளுடன் கடந்த திங்கட்கிழமை தியேட்டர்கள் திறக்கப்பட்ட நிலையில், முன்னணி ஹீரோக்களின் படங்கள் ஏதும் ரிலீஸ் ஆகவில்லை. இதனால், மரைக்கார் படத்தில் ஓடிடி-யில் வெளியிட இருப்பதாக தயாரிப்பாளர் அந்தோணி பெரும்பாவூர் தெரிவித்துள்ளார். ‘படம் முடிந்து சில வருடங்களாகிவிட்டன. இதன் ரிலீஸ் தாமதமாகிவிட்டது. இன்னும் தாமதிக்க முடியாது என்பதால் அமேசான் பிரைமுடன் பேசி வருகிறோம். பேச்சுவார்த்தை முடிந்தால் நேரடியாக ஓடிடி-தளத்தில் வெளியாகும் என்று அவர் கூறியுள்ளார்.









