மக்கள் நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று கர்நாடக மாநிலம், மாண்டியா சென்றுள்ளார். அங்கு அவருக்கு தொண்டர்கள் மலர்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க தலைமையிலான அரசின் பதவி காலம் வரும் மே 23-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதனால் கர்நாடக சட்டசபைக்கு இன்னும் ஓரிரு மாதங்களில் தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. இதனையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த தேசிய தலைவர்கள், கர்நாடக மாநிலத்திற்கு அவ்வப்போது வருகை தந்து, அரசியல் தொடர்பாக சுற்றுப்பயணங்களை மேற்கொள்வதோடு, புதிய திட்டங்களை தொடங்கி வைப்பது, அடிக்கல் நாட்டுவது என்று பல்வேறு வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடியும் ஏற்கனவே புதிய விமான நிலையம் திறப்பு, சாலை பாதுகாப்பு திட்டங்கள் தொடங்கி வைப்பது என்று 4 முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், தற்போது 5-வது முறையாக கர்நாடக மாநிலம் மாண்டியாவிற்கு வருகை தந்துள்ளார். மக்கள் நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக கர்நாடக மாநிலம், மாண்டியாவிற்கு, வருகை தந்த அவருக்கு தொண்டர்கள் மலர்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். காரை விட்டு இறங்கிய மோடி, அந்த இடத்திலேயே நின்று, தொண்டர்களின் வரவேற்பை ஏற்று கொண்டார்.தொண்டர்களும் மலர்களை தூவி தங்களது அளவு கடந்த அன்பையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர்.
மாண்டியாவில் இன்று நடைபெறும் நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, பெங்களூரு – மைசூரு இடையேயான 118 கி.மீ. தூர 10 வழி நெடுஞ்சாலை, ஹுப்ளி – தார்வாட் இடையிலான சாலையை திறந்து வைக்கிறார். சுமார் 16 ஆயிரம் கோடி ரூபாயிலான மக்கள் நல திட்ட பணிகளையும், இந்த நிகழ்வில் பயன்பாட்டுக்கு கொண்டு வர உள்ளதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து விமானம் மூலம் தார்வாட் நகருக்கு செல்லும் பிரதமர் மோடி, அங்கு நடக்கும் ஐ.ஐ.டி பல்கலைக்கழக விழாவில் கலந்துகொண்டு, புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடங்களை திறந்து வைக்கிறார். இதுபோன்ற நிகழ்வுகளுக்காக கர்நாடக மாநிலம் வரும் மோடிக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த முறை தார்வாட் மாவட்டத்தில் மிகவும் பிரபலமாக உள்ள கலகடகி ‘தொட்டில்’ வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. தொட்டிலின் மீது தசாவதார படங்கள் இடம் பெற்றுள்ளன. அதனுடன் சிறிய சித்தாரூடா சிலையும் அளிக்கப்படுகிறது. வழக்கமாக 15 நாட்கள் எடுத்து தயாரிக்கப்படும் இந்த தொட்டிலானது வெறும் 8-டே நாட்களில் தயார் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்த்துக்கொள்ள வாய்ப்புள்ளதால், சிறப்பான முறையில் இருக்கை வசதிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதோடு, ஐ.ஐ.டி., கட்டடத்தின் முன்புறத்திலேயே பெரிய மேடை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 200-க்கு மேல் உணவு கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளது. பிரதமரின் இந்த வருகையையொட்டி கர்நாடக மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா










