டெல்லியில் பணியாற்றி வந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர், ‘தான் வெளியிட்ட செய்தியின் காரணமாக, நாட்டை விட்டு வெளியேற மத்திய அரசால் கட்டாயப் படுத்தப்பட்டதாக கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த செய்தியாளர் அவனி தியாஸ், கடந்த இரண்டரை ஆண்டுகளாக டெல்லியில் நிருபராக பணியாற்றி வந்தார். இவர், காலிஸ்தான் டைகர் படைப்பிரிவின் தலைவரும், பிரிவினைவாதியுமான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்த சர்ச்சைக்குரிய செய்தி ஒன்றை சமீபத்தில் வெளியிட்டதாக கூறப்படுகிறது.
இதனை எல்லை மீறிய செயல் என கூறி அவரது விசாவை வெளியுறவு அமைச்சகம் ரத்து செய்தது. இதனால், அவர் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும், அவனி தியாஸ் பணிபுரியும் நிறுவனத்தின் யுடியூப் சேனலில் வெளியாகியுள்ள நிஜ்ஜார் கொலை குறித்த வீடியோவை இந்தியாவில் தடை செய்திருப்பதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.
இந்நிலையில், செய்தியாளர் அவனி தியாஸ் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில், “கடந்த வாரம், நான் திடீரென இந்தியாவை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. எனது விசா நீட்டிப்பு மறுக்கப்படும் என்று மோடி அரசு என்னிடம் கூறியது. பின்னர் ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் தலையீட்டின் காரணமாக, எனது விமானப் பயணத்திற்கு 24 மணி நேரத்திற்குள் எனக்கு இரண்டு மாத கால நீட்டிப்பு கிடைத்தது.
https://twitter.com/AvaniDias/status/1782542442501419041
‘ஜனநாயகத்தின் தாய்’ என்று மோடி அழைக்கும் தேசியத் தேர்தலுக்கு முந்தைய நாளில் நான் வெளியேறினேன்” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.







