தமிழ்நாட்டில் இருந்து பிரதமராக வரக்கூடிய தகுதி உடைய ஒரே நபர் எடப்பாடி பழனிசாமி தான் என அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் கூறியிருந்த நிலையில், மோடியா? எடப்”பாடியா”? என களம் மாறுகிறதா என ஒபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் வினவியுள்ளார்.
தமிழ்நாட்டிற்கு நேற்று வந்திருந்த மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமர் வரவேண்டும் என்பதே எனது விருப்பம் எனக்கூறியிருந்தார். இதற்கு தமிழகத்தில் பல்வேறு கட்சியினர் பதில் அளித்து வரும் நிலையில், தமிழக மக்களை ஏமாற்ற அமித்ஷா இப்படி பேசியுள்ளதாக திமுக சார்பில் விமர்சிக்கப்பட்டது. அதோடு இல.கணேசனை வேண்டுமானால் பிரதமராக்குங்களேன் என திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் கூறியிருந்தார்.
இந்நிலையில் அதிமுகவின் மூத்த தலைவர் பொன்னையன், தமிழ்நாட்டில் இருந்து இரு பிரதமர்களை தவற விட்டதாக அமித்ஷா கூறியதில் உண்மைத்தன்மை இருப்பதாகவும், அதை யாராலும் மறுக்க முடியாது எனவும் கூறினார். காமராஜர், மூப்பனார் ஆகிய இருவரும் திறமைமிக்கவர்கள் என்பதால் பிரதமராக வர வேண்டும் என பல மாநில முதல்வர்கள் விரும்பினார்கள். வடக்கில் இருந்து எதிர்ப்பு வந்தது ஆச்சர்யபடுவதற்கில்லை. கருணாநிதி செய்த ஊழல்களை நன்கு தெரிந்தவர்கள் என்பதால் அவர்கள் இருவரையும் பிரதமராக விடாமல் முட்டுக்கட்டை போடப்பட்டது.
தமிழ்நாட்டில் இருந்து பிரதமாக வரக்கூடிய தகுதி உடைய ஒரே நபர் எடப்பாடி பழனிசாமி தான். இந்திய, உலக அரசியலை தெரிந்தவர். விரல்நுனியில் புள்ளி விவரங்களை வைத்திருக்கும் எடப்பாடி பழனிசாமி தான் தமிழ்நாட்டில் இருந்து பிரதமாராகக் கூடிய தகுதி உள்ளவர். பாஜகவின் கொள்கைகளால், அதிமுகவின் வாக்கு வங்கியை இழந்து விட்டோம். மதத்தை கடைபிடிப்பதால் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், தாழ்த்தப்பட்டவர்களின் வாக்கு வங்கியை இழந்துவிட்டோம். பாஜகவின் கொள்கையை மாற்ற சொல்லியுள்ளோம். மாற்றுவார்கள் என நம்புகிறோம் என பொன்னையன் தெரிவித்தார்.
அதிமுகவும், பாஜகவும் கூட்டணியில் இருப்பதாக சொல்லி வரும் நிலையில் பொன்னையனின் இந்த பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஒபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ், 2024 – தேர்தலுக்கான பிரதமர் வேட்பாளராக மோடியை ஏற்க முடியாது என்பதை தான் பொன்னையன் மூலமாக எடப்பாடி பழனிசாமி தெளிவுபடுத்தியிருப்பதாக கூறியுள்ளார். மேலும் மோடியை விட பிரதமராகும் தகுதி தனக்குத் தான் இருக்கிறது என்பதையும் அதே பொன்னையன் வாயிலாக எடப்பாடி பழனிசாமி சொல்லியிருப்பதாகவும் மருது அழகுராஜ் கூறியுள்ளார்.
மேலும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மோடியா, லேடியா எனக் கேட்டது போல் தற்போது “மோடியா? எடப்”பாடியா” என களம் மாறுகிறதா? சபாஷ் சரியான போட்டி” எனவும் மருது அழகுராஜ் கூறியுள்ளார்.







