இந்தியா – பாகிஸ்தான் எல்லை பகுதியில் ஊடுருவலை தடுக்க நவீன பாதுகாப்பு வேலி..!

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் ஊடுருவலை தடுக்க நவீன பாதுகாப்பு வேலி அமைக்கப்படுகிறது. இது குறித்த சிறப்பு செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம். இந்தியாவில் ஜம்மு காஷ்மீர்…

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பகுதியில்
ஊடுருவலை தடுக்க நவீன பாதுகாப்பு வேலி அமைக்கப்படுகிறது. இது குறித்த சிறப்பு செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் முதல் பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய
மாநிலங்கள் பாகிஸ்தான் நாட்டின் எல்லைப் பகுதிகளாக அமைந்துள்ளது. சுமார் 3,300
கிலோமீட்டர் எல்லை பகுதியில் சுமார் 500 கி.மீ தூரம் குஜராத் மாநில எல்லை
பகுதியாக இருக்கின்றது. எல்லைகளில் பாதுகாப்பு வேலிகள் அமைத்தும், கண்காணிப்பு
கோபுரங்கள் அமைத்தும் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் தொடர்ந்து மழையிலும்,
வெயிலிலும், இரவும் பகலும் 24 மணி நேரமும் கண்காணித்து ரோந்து பணியில்
ஈடுபட்டு வருகின்றனர். பாலைவனத்தின் தொடர்ச்சியான வறண்ட நிலப்பரப்பும், உப்பு
பாலைவனமும், சதுப்பு நிலப் பகுதிகளும் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள்
கண்காணிப்பில் ஈடுபடுவது கடினமான சவால் நிறைந்த பணியாக இருக்கின்றது.

யாரும் எளிதில் செல்ல முடியாத இந்த இடத்திற்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின்
அனுமதியுடன் Press information Bureau வழிகாட்டுதலோடு. எல்லை சாலை, மணல்மேடு,
சதுப்பு நிலங்கள் என அனைத்தையும் கடந்து நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் எல்லைப்
பகுதிக்குச் சென்று BSF வீரர்கள் மழை, வெயில் பாராமல் கண்காணிப்பு பணியில்
ஈடுபட்டு வருவதையும், மேம்பாட்டு பணிகள் குறித்தும் எல்லை பாதுகாப்பு படை
அதிகாரிகளிடம் தகவல்களை சேகரித்து நியூஸ் 7 தமிழ் பிரத்தியேகமாக பதிவு
செய்துள்ளது.

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தை ஒட்டிய இந்திய எல்லை பகுதியிலிருந்து 60 கிலோ
மீட்டர் தூரத்திற்கு குடியிருப்புகள் அனுமதி கிடையாது மற்றும் எந்த ஒரு நபரும்
உள்ளே செல்ல முடியாத வகையில் செக்போஸ்ட் அமைத்து கண்காணித்து வருகின்றனர்.
இந்திய பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் கடற் பகுதிகளில் படையில் சென்று ரோந்து
பணியிலும், கடினமான சதுப்பு நிலங்களிலும் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள்
ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த எல்லைப் பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பாக அமைக்கப்பட்ட 2 அடுக்கு இரும்பு வேலிகளை அகற்றிவிட்டு ஸ்மார்ட் பென்சிங் என்று சொல்லக்கூடிய நவீன பாதுகாப்பு மேம்படுத்தப்பட்ட வேலிகளை அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

முதற்கட்டமாக பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஜம்மு காஷ்மீரில் இந்த ஸ்மார்ட்
பென்சிங் பரிசோதனை முறையில் அமைக்கும் பணி தொடங்கியுள்ளதாகவும், அதே போன்று குஜராத் மாநிலத்தின் எல்லை பகுதிகளிலும் முதற்கட்டமாக 13 கிலோமீட்டர்
தொலைவிற்கு நவீன பாதுகாப்பு மேம்படுத்தப்பட்ட வேலி அமைக்கப்பட உள்ளது எனவும் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நவீன பாதுகாப்பு வேலி தற்போதுள்ள இரும்பு முள்வேலிகளைப் போல் அல்லாமல்
எளிதில் உடைக்க முடியாத துருப்பிடித்து பழுதடையாத வேலியாகவும் அமைக்கப்பட
இருக்கின்றது. மேலும் இந்த வேலையை தொட்டால் சென்சார் மூலமாக தகவல் கிடைக்கும்
வகையில் வடிவமைக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவை தவிர்த்து
பாகிஸ்தானுக்குள் ஒரு கிலோ மீட்டர் தொலைவு வரை யாரும் இந்திய எல்லைக்குள் ஊடுருவி வந்தால் தெர்மல் ஸ்கேனர் மூலம் கண்காணிக்கும் தொடர்பு வசதியும் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் குஜராத் மாநிலத்தில் உள்ள இந்தியா பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் 22
கிலோமீட்டர் தொலைவிற்கு வேலியே இல்லாத சதுப்பு நிலங்களும் கடற் பகுதிகளும்
இருக்கின்றன. இந்தப் பகுதிகளில் எல்லை பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு மற்றும்
ரோந்து பணியில் ஈடுபடுவது சவால் நிறைந்ததாகவே உள்ளது. மிகவும் கடினமான சூழலில் தான் அந்த பகுதியில் பணியாற்றி வருகின்றனர். இந்த மேம்படுத்தப்பட்ட நவீன
பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டால் வேலி இல்லாத கடற் பகுதி மற்றும் சதுப்பு
நிலங்களில் ஊடுருவலை தடுக்க முடியும் என்கின்றனர் எல்லை பாதுகாப்பு படை
அதிகாரிகள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.