உங்களில் ஒருவன் இரண்டாம் பாகத்தில் மிசா சிறைக்காலம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதவுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய உங்களின் ஒருவன் – பாகம் 1 சுயசரிதை நூல் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் இன்று நடைபெறவுள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நூலை வெளியிட கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா உள்ளிட்டோர் பெற்றுக்கொள்கின்றனர்.
இந்த நிலையில் உங்களில் ஒருவன் நூலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “எனக்கு திரும்ப திரும்ப நினைவில் வரும் வார்த்தையாக பேரறிஞர் அண்ணாவின் மக்களிடம் செல், மக்களோடு வாழ் என்ற வார்த்தையே இருக்கிறது. எனக்கும் துர்காவுக்குமான திருமணம் திருமண நிகழ்ச்சியாக மட்டுமல்லாமல் அகில இந்திய மாநாடாகவே நடந்தது. பொது வாழ்வை பூங்காவாக நான் எப்போதும் கருதுவது இல்லை. அது புயலை எதிர்த்து நிற்பதாகத்தான் அப்போதும் இருந்துள்ளது…இப்போதும் இருக்கிறது” என்ற பகுதிகள் இடம்பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், மிகச்சிறு வயதுள்ள ஒருவன் தனது இலக்கை மிகச்சரியாகத் தீர்மானித்தால் வெற்றி பெற முடியும் என்பதுதான் இன்றைய தலைமுறைக்கு நான் சொல்லும் ஒற்றை வழிகாட்டி நெறிமுறை என்று தனது நூலில் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், “எவற்றையும் எதிர்கொள்ள வேண்டும், சமாளித்து வெற்றிகொள்ள வேண்டும் என்ற இரண்டு முடிவுகளையும் எடுத்துக்கொண்டுதான் எனது அரசியல் பயணத்தைத் தொடங்கினேன்” என்றும் குறிப்பிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று நான் சொல்லிவிட்டு நிமிர்ந்து பார்த்தபோது எனது மனக்கண்ணில் தலைவர் கலைஞர் முகம்தான் தெரிந்தது என்றும் கூறியுள்ளவர், மிசா சிறைவாசத்தின் சித்திரவதைக் காட்சிகளை உங்களில் ஒருவன் இரண்டாம் பாகத்தில் சொல்வேன் எனவும் அறிவித்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.







