பரப்புரையின்போது திமுகவினர் சொற்களை கவனத்துடன் பயன்படுத்த வேண்டுமென அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள சூழ்நிலையில் அதிமுக, திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் பிரச்சாரமும் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் பிரச்சாரத்தில் திமுகவின் முன்னணி நிர்வாகிகள் சிலர் பேசிய பேச்சுக்கள் சர்ச்சைக்குரியவையாக மாறின.
இதுதொடர்பாக திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி, அரசியல் தலைவர்கள் யாராக இருந்தாலும் பெண்களை இழிவு படுத்தி தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வது கண்டிக்கத்தக்கது என்று கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில், திமுகவினர் பரப்புரையின்போது கட்சியின் மரபையும் மாண்பையும் மனதில் வைத்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
வெற்றிக்கு முன்பாக அதற்கான பாதையும் முக்கியமானது எனவும், அண்ணா வலியுறுத்திய கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு ஆகிய மூன்றில் பேச்சாளருக்கு முதன்மையாக இருக்க வேண்டியது கண்ணியமாகும் என்று தெரிவித்த ஸ்டாலின், கண்ணியக் குறைவான சொற்களை வெளிப்படுத்துவதை தலைமை ஒருபோதும் ஏற்காது எனவும் சுட்டிக்காட்டினார்.
மேலும், திமுகவினரின் பேச்சுகளைத் திரித்து, வெட்டி – ஒட்டி, தவறான பொருள்படும்படி செய்து வெற்றியைத் தடுக்க நினைத்து மூக்குடைபட்டவர்கள், இப்போதும் தோல்வி பயத்தால் அதே பாணியை மேற்கொண்டிருக்கிறார்கள் எனவும், அவர்களுடைய எண்ணம் ஈடேறாத வகையில் திமுகவினர் கவனத்துடன் சொற்களை பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.







