கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான 60வது லீக் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கி பல்வேறு மைதானங்களில் நடைபெற்று வருகிறது. 59 லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் எந்த நான்கு அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும் என தீவிரமாக சென்றுகொண்டிருக்கிறது போட்டி. இந்நிலையில் இன்று 60வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.
இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஆனால் இன்று போட்டி 16 ஓவர்களாக சுருக்கப்பட்டுள்ளது. மழையின் காரணமாக எப்போதும் 7 மணிக்கு போடப்படும் டாஸ் இன்று 9 மணிக்கு போடப்பட்டதால் போட்டி 16 ஓவர்களாக சுருக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று போட்டியும் தாமதமாக தொடங்கப்பட்டுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இதுவரை 11 போட்டிகள் விளையாடி உள்ள நிலையில் 8 வெற்றி, 3 தோல்விகளுடன் 16 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதேநேரம் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 12 போட்டிகள் விளையாடி உள்ள நிலையில் 4 வெற்றி, 8 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.







