இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் அதிக ரன்கள் எடுத்த வீராங்கனைகள் பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியை டிரா செய்த இந்திய அணி. 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டியில், 2 போட்டிகளில் தொடர்ந்து தோல்வியை தழுவியது.
இந்த நிலையில் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி, வார்செஸ்டரில் நேற்று நடைபெற்றது. மழையால் போட்டி தாமதமாகத் தொடங்கியதால், 47 ஓவர்களாகக் குறைக்கப்பட்டன. டாஸ் வென்ற இந்திய பெண்கள் அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 47 ஓவர்களில் 219 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக அந்த அணியின் நட் சீவர் (Nat Sciver) 49 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் களமிறங்கிய இந்திய பெண்கள் அணி, 46.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்து ஆறுதல் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கேப்டன் மிதாலி ராஜ் 75 ரன்கள் குவித்தார்.
இந்த போட்டியில் 23 வது ஓவரில், மிதாலி அடித்த பவுண்டரி மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்களை விளாசிய வீராங்கனைகள் வரிசையில், முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். அவர் ஒரு நாள், டெஸ்ட், டி20 ஆகிய மூன்றுவிதமான போட்டிகளிலும் சேர்த்து 10,337 ரன்கள் எடுத்துள்ளார்.
இதற்கு முன் இங்கிலாந்து பெண்கள் அணியின் முன்னாள் கேப்டன் சார்லட் எட்வர்ட்ஸ்தான் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். அவர் 10 ஆயிரத்து 273 ரன்கள் எடுத்து சாதனை படைத்திருந்தார். அதைமித்தாலி ராஜ் முறியடித்துள்ளார்.
சர்வதேச பெண்கள் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை கடத்தவர்கள் இவர்கள் இருவர் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.







