பாகிஸ்தான் மண்ணில் இந்தியாவில் இருந்து பறந்து வந்த ஏவுகணை வடிவிலான பொருள் விழுந்த விவகாரத்தில் இந்திய விமானப் படையைச் சேர்ந்த இந்திய விமானப் படையைச் சேர்ந்த 3 அதிகாரிகளை மத்திய அரசு பணி நீக்கம் செய்தது.
கடந்த மார்ச் 9ஆம் தேதி பாகிஸ்தானின் மியான் சன்னுவில் வெடிமருந்து நிரப்பப்படாத காலியான இந்திய ஏவுகணை கலன் (பிரமோஸ் வடிவிலானது) விழுந்தது.
இதையடுத்து, பாகிஸ்தான் ராணுவத்தின் மக்கள் தொடர்புத் துறையின் (ISPR) தலைமை இயக்குநர் ஜெனரல் மேஜர் பாபர் இஃப்திகார், மார்ச் 10 அன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் “மியான் சன்னுவில் விழுந்த அதிவேகப் பொருள் அநேகமாக இந்திய ஏவுகணையாக இருக்கலாம்” என்று கூறினார்.
அடுத்த நாள், மார்ச் 11 ஆம் தேதி, இந்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிக்கையில், “வழக்கமான பராமரிப்பு பணியின் போது தொழில்நுட்பக் கோளாறால் ஏவுகணை தவறுதலாக ஏவப்பட்டது” என்று ஒப்புக்கொண்டது. மேலும் இந்திய பாதுகாப்பு அமைச்சகம் உயர்மட்ட விசாரணைக்கும் உத்தரவிட்டது.
இந்நிலையில், விசாரணை நிறைவடைந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக 3 அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து இந்திய விமானப் படை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
நிலையான செயல்பாட்டு நடைமுறைகளில் தவறு நேர்ந்தது. இதுவே ஏவுகணை பாகிஸ்தானில் தவறி விழ வழிவகுத்தது. இதற்கு 3 அதிகாரிகள் தான் பொறுப்பு. விசாரணையில் கிடைத்த தகவல்களின்படி, இவர்கள் மூவரும் குரூப் கேப்டன், விங் கமாண்டர், ஸ்குவாட்ரான் லீடர் ஆகிய பதவிகளில் உள்ளனர்.
அவர்களை பணியைவிட்டு மத்திய அரசு உடனடியாக நீக்கியது. ஆகஸ்ட் 23, 2022 அன்று பணிநீக்க உத்தரவுகள் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டன என்று இந்திய விமானப் படை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








