அக்னிபாத் திட்டம் குறித்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று ராணுவம் கேட்டுக்கொண்டுள்ளது.
அக்னிபாத் திட்டம் தொடர்பாக முப்படைகளின் உயரதிகாரிகள் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, அக்னிபாத் திட்டம் தொடர்பாக பரப்பப்படும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
அக்னிபாத் திட்டம் 3 முக்கிய நோக்கங்களைக் கொண்டது என தெரிவித்த திட்டத்திற்கான பாதுகாப்புத் துறை கூடுதல் செயலர் அனில் பூரி, இத்திட்டத்தின் மூலம் இளமையான, தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் ராணுவத்தில் அதிகரிப்பார்கள் என்றும், ராணுவத்திற்கு ஏற்றவர்கள் நிரந்தரப் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் அக்னிவீரர்களாக பணியாற்றியவர்களின் எதிர்காலமும் சிறந்து விளங்கும் என்றும் தெரிவித்தார்.
அக்னிபாத் திட்டம் தொடர்பாக பல்வேறு வதந்திகள் வெளியாகி வருவதாகக் குறிப்பிட்ட அனில் பூரி, வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.
அக்னிவீரர்களை தேர்வு செய்வதற்கான நடைமுறையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என்று தெரிவித்த அனில் பூரி, ராணுவத்தில் தற்போது நடைமுறையல் உள்ள ரெஜிமெண்டல் முறையிலும் மாற்றம் இருக்காது என்றார்.
ராணுவத்தில் ஏற்கனவே பணியாற்றியவர்கள் அக்னிவீர் திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள் என்று கூறப்படுவதிலும் உண்மை இல்லை என அவர் குறிப்பிட்டார்.
விமானப்படையில் அக்னிவீரர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரிக்கப்படும் என்றும், எதிர்காலத்தில் ஆண்டுக்கு 10 ஆயிரம் பேர் வரை விமானப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் ஏர் மார்ஷல் எஸ்.கே. ஜா தெரிவித்தார்.
போருக்கான இந்திய விமானப்படையின் தயார் நிலையில் எவ்வித சமரசமும் இருக்காது என குறிப்பிட்ட அவர், படையின் தயார் நிலைக்காக ராணுவம் எதையும் செய்யும் என்றார்.
கடற்படைக்கான அக்னிவீரர்களின் ஆன்லைன் பதிவு ஜூலை 1ம் தேதி தொடங்கும் என தெரிவித்த கப்பற்படை வைஸ் அட்மிரல் தினேஷ் திருப்பதி, அக்டோபர் மத்தியில் எழுத்து மற்றும் உடற் தகுதி தேர்வுகள் நடத்தப்படும் என்றார்.











