மழையினால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதி மாவட்டங்களில் பயிர் சேதங்களைப் பார்வையிட அமைச்சர் குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸடாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த சில நாட்களில் தஞ்சாவூர், திருச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், அரியலூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பெய்த கன மழையின் காரணமாக அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர் உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் நீரில் சாய்ந்து மூழ்கியுள்ளது அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. இந்த பருவம் தவறி பெய்த திடீர் மழை தற்போது குறைந்து வருகிறது.
மேலும் நீரினை வடிய வைக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது சம்பந்தமாக ஏற்கெனவே, வருவாய்த் துறை மற்றும் வேளாண்மைத் துறை அதிகாரிகள் களத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டு அவர்கள் முதல்நிலை ஆய்வினை மேற்கொண்டுள்ளார்கள்.
மேலும், இதனை நேரடியாக ஆய்வு செய்வதற்காக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோரை அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் வேளாண்மைத் துறைச் செயலாளர் மற்றும் இயக்குநர் உள்ளிட்ட மூத்த துறை அதிகாரிகளையும் இந்தக் கள ஆய்வினை மேற்கொண்டு விவசாயிகளைச் சந்தித்துப் பேசி விபரங்களைப் பெற அறிவுறுத்தியுள்ளேன்.
வரும் திங்கட்கிழமை (6-2-2023) அன்று இந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவை சந்தித்து, சேத விபரங்களை அறிந்து, மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு பயிர்காப்பீடுத் தொகை பெற்றுத் தருவது குறித்தும், இழப்பீடு வழங்குவது குறித்தும் உரிய மேல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.








