ஜெயலலிதாவாக மாறிய அமைச்சரின் பேத்தி!

அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கு ஆதரவாக ஜெயலலிதா வேடத்தில் சிறுமி ஒருவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.  சட்டமன்றத் தேர்தல் பரப்புரை முடிய இன்னும் 30 மணி நேரங்கள் மட்டுமே இருப்பதால் வேட்பாளர்கள் தீவிரப் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்கள். வாக்கு…

அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கு ஆதரவாக ஜெயலலிதா வேடத்தில் சிறுமி ஒருவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

சட்டமன்றத் தேர்தல் பரப்புரை முடிய இன்னும் 30 மணி நேரங்கள் மட்டுமே இருப்பதால் வேட்பாளர்கள் தீவிரப் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்கள். வாக்கு சேகரிப்பின்போது தோசை சுடுதல், பரோட்டா போடுதல், துணி துவைத்துக் கொடுப்பது என வேட்பாளர்கள் செய்யும் செயலும் கவனம் ஈர்க்கிறது.

 திருச்சி கிழக்கு தொகுதியில் அதிமுக சார்பில் சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்  போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து திமுக சார்பில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவர் இனிகோ இருதயராஜ் போட்டியிடுகிறார். மீண்டும் வெற்றிபெற வேண்டும் என்ற இலக்கோடு தொகுதி முழுக்க தீவிர பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். அமைச்சர் வெல்லமண்டி நடராஜன். 

ஜெ.ஜெ.நகர், கே.கே.நகர் ஆகிய பகுதிகளில் பரப்புரை மேற்கொண்ட வெல்லமண்டி நடராஜன் அங்கிருந்த ஒரு கோழிக்கடைக்குச் சென்ற கோழிக் கறியை வெட்டி வாடிக்கையாளர்களிடம் கொடுத்து வாக்கு சேகரித்தார்.

இதனிடையே வெல்லமண்டி நடராஜன் பரப்புரை வாகனத்தில் ஜெயலலிதாவைப் போலவே கண்ணாடி, உடை அணிந்த சிறுமி ஒருவர் பரப்புரை மேற்கொண்டார். “மக்களால் நான், மக்களுக்காகவே நான், உங்களால் நான், உங்களுக்காகவே நான், வெல்லமண்டி நடராஜனுக்கு ஓட்டுப்போட்டு வெற்றிபெறச் செய்வீர்களா?” என அச்சு அசலாக ஜெயலலிதா பாணியிலேயே வாக்கு சேகரித்தார். 

இதனைக் கண்ட அருகிலிருந்த அதிமுகவினர் கைகளைத் தட்டி அவரை உற்சாகப்படுத்தினர். அதன்பிறகுதான் அந்த சிறுமி வேறு யாருமல்ல, வெல்லமண்டி நடராஜனின் மகன்  பேத்தி சாய்மித்ரா  என்பது தெரியவந்தது. தாத்தாவுக்காக பேத்தியே ஜெயலலிதா வேடத்தில் வந்து பரப்புரை மேற்கொண்டது அனைவரையும் கவர்ந்தது. 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.