மதுரையில் காலை உணவு திட்டத்திற்காக தயாராகும் உணவுகளை அமைச்சர் உதயநிதி ஆய்வு செய்து குழந்தைகளுடன் உணவு அருந்தினார்.
2-நாள் அரசு முறை பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரைக்கு சென்றுள்ளார். அங்கு “கள ஆய்வில்” முதலமைச்சர் திட்டத்தின் கீழ் , மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி ஆகிய 5 மாவட்டங்களில் அரசுப் பணிகள் செயல்பாடு குறித்து ஆய்வு அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் மதுரைக்கு சென்றுள்ள விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காலை உணவு திட்டத்திற்காக தயாராகும் உணவுகளை ஆய்வு செய்து குழந்தைகளுடன் உணவு அருந்தினார். மதுரை மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் 73 அரசு பள்ளிகளை சார்ந்த 8,702 குழந்தைகள் பயன் பெறுகின்றனர்.
இந்நிலையில் நாராயணபுரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் காலை உணவு திட்டத்திற்காக தயாரிக்கப்படும் உணவுகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து, உணவு தயாரிப்பு குறித்த விபரங்களை கேட்டறிந்தார்.
மேலும் அதே பள்ளியில் பயிலும் குழந்தைகளுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காலை உணவு அருந்தி கலந்துரையாடினார். பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் பள்ளி குழந்தைகளுடன் அமர்ந்து உணவு அருந்தினார். இந்த ஆய்வில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்.வசந்த், மாநகராட்சி ஆணையர் சிம்ரன் ஜித் சிங் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
- பி.ஜேம்ஸ் லிசா








