அமைச்சர் செந்தில் பாலாஜி டிவிட்டர் கணக்கை ஹேக்கர்கள் ஹேக் செய்து வைத்திருப்பதால், இது தொடர்பாக குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் ஹேக்கர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. அண்மை காலமாக முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம், டிவிட்டர் கணக்குகளை ஹேக் செய்யும் மர்ம நபர்கள், அதன் மூலம் பணம் கேட்டு தகவல்களை பரிமாறி வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
குறிப்பாக முகநூல் கணக்குகளில் ஏராளமானவர்கள் பெயரில் போலி கணக்குகளை உருவாக்கி அதன் மூலம் நண்பர்களுக்கு பணம் கேட்டு குறுஞ்செய்தி அனுப்புவதும், ஆபாச பதிவுகளை பகிர்வதும் ஹேக்கர்களின் அன்றாட வேலைகளில் ஒன்றாக உள்ளது. மேலும் தலைவர்கள், சமூகத்தில் முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்களின் டிவிட்டர் கணக்குகள் ஹேக்கர்களால் அடிக்கடி ஹேக் செய்யப்பட்டு முடக்கி விடப்படுகின்றன.
அந்த வகையில் தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியின் டிவிட்டர் கணக்கை மர்ம நபர்கள் முடக்கியுள்ளனர். வேரியோரியஸ் என்ற பெயரில் அவரது டிவிட்டர் கணக்கை அபகரித்த ஹேக்கர்கள் அதில் கிரிப்டோ கரன்சி குறித்த தகவல்களை பரப்பி வருகின்றனர். நேற்று மாலையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜியின் டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.
கொரோனா பேரிடர் காலத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவதற்காக ஒரு மில்லியன் பணம் திருட்ட விரும்புவதாக ஹேக்கர்கள் அதில் பதிவிட்டுள்ளனர். மேலும், கிரிப்டோ கணக்குகளை உருவாக்கியுள்ளதாகவும் இதன் மூலம் கிடைக்கும் பணம் ஹெல்பிண்டியா நிறுவனத்திற்கு அனுப்பப்படும் என்றும் பரப்பி வருகின்றனர்.
இது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்துள்ள விளக்கத்தில், நேற்று இரவு முதல் தனது டிவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும், இது குறித்து கணினி குற்றப்பிரிவுக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
– இரா.நம்பிராஜன்