தமிழ்நாட்டில் பிரிவினைவாதம் பேசக்கூடிய ஆட்சியதாக திமுக உள்ளது என பாஜக அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
திருப்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை , கேரளாவில் நடைபெற்ற தென்னிந்திய மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி பற்றி பேசியிருப்பதை சுட்டிக்காட்டினார். 2004 – 2014-ம் ஆண்டு வரை மத்தியில் கூட்டாட்சி இருந்ததால் இந்தியா பின்னோக்கி சென்றது என சாடினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
8 ஆண்டுகளில் பெரும்பான்மையோடு ஒரு கட்சி ஆட்சி செய்ததால் சுயசார்பு பாரதம் சாத்தியமானது என தெரிவித்த அவர், மாநிலத்தின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் மற்ற மத நிகழ்வுக்கு முண்டியடித்து வாழ்த்து சொல்வதும், இந்துக்களின் பண்டிக்கைக்கு வாழ்த்து சொல்லாமல் மவுனம் காப்பதுதான் மதசார்பா ? இதன் மூலம் மத மோதலுக்கு முதலமைச்சர் வித்திடுகிறாரா ? என்றும் கேள்வி எழுப்பினார்.
ஆனால் பிரதமர் மோடி இஸ்லாமிய பண்டிகைக்கு , கிறிஸ்துவ பண்டிகைக்கு என அனைத்து மதத்தினருக்கும் வாழ்த்து சொல்லுகிறார். ஆனால் அவரைப்பார்த்து ஒரு மதத்திற்காக ஆட்சி செய்வதாக மு.க.ஸ்டாலின் கூறுவது வேடிக்கையானது என்றார். இந்தியாவிலேயே ராமர் கோயிலுக்கு அதிக நிதி கொடுத்த 3 மாநிலங்களில் தமிழ்நாடு உள்ளது என்றும் இது ஆன்மீக பூமியாகவே இருக்கிறது என்றும் கூறினார்.
தமிழ்நாட்டின் பிரிவினைவாதம் பேசக்கூடிய ஆட்சியாக திமுக உள்ளது என குற்றம்சாட்டிய அண்ணாமலை, மக்களுக்கான ஆட்சியாக இந்து வாழ்வியல் முறையிலான ஆட்சி தேவைப்படுகிறது என்றார். யோகா, ஆயூர்வேதம், சித்தா என கொண்டு வந்த பிறகு நம் இந்து வாழ்வியல் முறையை முறியடிக்க ANTI hindu aliance என்பது அமெரிக்காவில் உருவாக்கப்பட்டு பத்திரிகைகளில் இந்திய அரசுக்கு எதிராக எழுதி வருகின்றனர் என்றும் சுட்டிக்காட்டினார்.
– இரா.நம்பிராஜன்