அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம் : பதவி நீக்க உத்தரவு நிறுத்தி வைப்பு?  

அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதவி நீக்க உத்தரவு கிடப்பில் போடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர்…

அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதவி நீக்க உத்தரவு கிடப்பில் போடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து உடல்நலம் பாதிக்கப்பட்டதைத்தொடர்ந்து அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு காவேரி மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை நடைபெற்றது. தற்போது அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்.

கைது செய்யப்பட்ட பின்னர் செந்தில் பாலாஜியின் இலாகாக்கள், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமி ஆகியோருக்கு ஒதுக்கப்பட்டன. பின்னர் செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தொடர ஆளுநர் ஆர்.என்.ரவி அனுமதி மறுத்த நிலையில், மீண்டும் தமிழ்நாடு அரசு சார்பில் பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கப்படுவதாக நேற்று ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவித்தார்.  இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது :
”அமைச்சர் செந்தில் பாலாஜி, வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பணமோசடி செய்தல் உள்ளிட்ட பல்வேறு ஊழல் வழக்குகளில் கடுமையான குற்றவியல் வழக்குகளை எதிர்கொண்டுள்ளார். அமைச்சர் பதவியை துஷ்பிரயோகம் செய்து, விசாரணையில் செல்வாக்கு செலுத்தி, சட்டம் மற்றும் நீதி வழங்கப்படுவதை தடுக்கிறார்.
குற்றவியல் வழக்கில் நீதிமன்ற காவலில் உள்ள செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வது  சட்டத்தின் செயல்பாட்டை கடுமையாக பாதிக்கும். இத்தகைய சூழலின் அடிப்படையில், செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி நீக்கம் செய்துள்ளார்” என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில்,  அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதவி நீக்க உத்தரவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. கிடப்பில் போட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விவகாரத்தில் அட்டர்னி ஜெனரலின் ஆலோசனை பெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்து எந்த  அதிகாரப்பூர்வஅறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.