ஓ.பன்னீர்செல்வம் அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற அமைப்பை தொடங்கி நடத்தி வந்தார். பின்னர் அந்த அமைப்பின் பெயரை அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகமாக மாற்றினார். தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றிருந்த அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகம் அக்கூட்டணியில் இருந்து விலகுவதாக ஓபிஎஸ் சமீபத்தில் அறிவித்திருந்தார். இதனையடுத்து அவர் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
இதற்கிடையே, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.க்களாக செயல்பட்ட மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோர் சமீபத்தில் திமுகவில் இணைந்தனர். இந்த சூழலில், தமிழக சட்டப்பேரவை கடந்த 20-ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. தொடர்ந்து, நிறைவு நாளான இன்று முதலமைச்சரின் பதில் உரை இடம்பெற்றது. ஆனால், அதிமுக உறுப்பினர்கள் யாரும் கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தனர்.
அதே நேரத்தில், ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவு எம்.எல்.ஏ. அய்யப்பன் ஆகியோர் அவைக்கு வந்திருந்தனர். சட்டப்பேரவை கூட்டம் நிறைவடைந்ததும் சபாநாயகர் அறைக்கு ஓ.பன்னீர்செல்வம் சென்ற நேரத்தில், அவரை அமைச்சர் பி.கே.சேகர்பாபு சந்தித்து பேசினார். ஓ.பன்னீர்செல்வம் – பி.கே.சேகர்பாபு இடையேயான சந்திப்பு சுமார் 15 நிமிடங்கள் நீடித்தது. இந்த சந்திப்பின்போது, திமுகவில் இணைய ஓ.பன்னீர்செல்வத்தை சேகர்பாபு வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.







