திருக்கோயில்களில் இனி மொட்டை போட்டால் கட்டணம் கிடையாது என அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத்தில் இந்து சமய அறநிலையத் துறை சார்பாக 112 அறிவிப்புகளை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டார். திருக்கோயில்களின் பாதுகாப்பிற்காக 10,000 பாதுகாப்பு பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள், அவர்களுக்கு தேவையான பயிற்சிகள் வழங்கப்படும் என்றும், மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருப்பின் திருக்கோயிலில் அவர்களுக்கு நடைபெறும் திருமணத்திற்கான கட்டணம் வசூலிக்கப்படாது எனவும் அறிவித்தார்.
திருக்கோயிலுக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றால் மண்டபத்திற்கான பராமரிப்பு கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் என்று குறிப்பிட்ட அமைச்சர், திருக்கோயில்களில் இனி மொட்டை போட்டால் கட்டணம் இல்லை என்றும் அறிவித்தார்.
மேலும், சென்னை உட்பட தமிழ்நாட்டில் 10 இடங்களில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் 150 கோடி ரூபாய் செலவில் தொடங்கப்படும் எனவும் கூறினார். அதன்படி, சென்னையில் கொளத்தூர், கீழ்ப்பாக்கம் ஆகிய இடங்களில் கல்லூரிகள் அமைகின்றன. விளாத்திக்குளம், தொப்பம்பட்டி, அணைக்கட்டு, கலசப்பாக்கம், திருக்காட்டுப்பள்ளி, லால்குடி, கடையம், திருச்செங்கோடு ஆகிய இடங்களிலும் கல்லூரி தொடங்கப்படவுள்ளன.







