தை மாதம் அல்ல மாசி பிறந்தாலும் பங்குனி பிறந்தாலும் எந்த மாதம் பிறந்தாலும் திமுகவுக்கும் ஸ்டாலினுக்கும் நல்லவழி பிறக்காது என்று வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார்.
மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி 16ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு முகூர்த்த கால் ஊன்றும் விழா நடைபெற்றது. இதில் வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர், ஆர்.பி.உதயகுமார் மாவட்ட ஆட்சித் தலைவர் அன்பழகன் ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.பி உதயக்குமார், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். ஸ்டாலினும், உதயநிதியும் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக நாகரிகமற்ற அரசியல் செய்வதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். உதயநிதி ஸ்டாலின் பேச்சு தமிழகத்தில் எடுபடாது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் பேசிய வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் வரும் 16 ஆம் தேதி தொடங்கி வைக்கிறனர் என்று கூறினார். போட்டியில் முதல் பரிசு பெறுபவருக்கு முதலமைச்சரின் பெயரில் சிறந்த காளைக்கு கார் பரிசாக வழங்கப்படும் என்று கூறினார். சிறந்த மாடுபிடி வீரர்க்கு துணை முதலமைச்சர் பெயரில் ஒரு கார் பரிசாகவும் வழங்கப்படும் என்றும் கூறினார்.







