ரயிலில் இருந்து பயணிகள் தவறி விழுவதால் ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் கூடுகிறதே தவிர, குறைவதாக இல்லை.
உள்ளே இடம் இருந்தாலும் படியில் நின்று கொண்டே பயணம் செய்வது, ரயில் பிளாட்பாரத்தில் நிற்பதற்கு முன்பே இறங்க முயற்சிப்பது, வண்டி கிளம்பிய பிறகு ரன்னிங்கில் சென்று ஏறுவது போன்ற செயல்பாடுகளால் தான் இதுபோன்ற விபத்துகள் ஏற்படுகின்றன. தவிர நமது அஜாக்கிரதையாலும் விபத்துகள் ஏற்படுவது உண்டு.
அப்படி ஒரு விபத்து தான் மகாராஷ்டிராவில் ஏற்பட்டிருக்கிறது. அங்கு தானே ரயில் நிலையத்தில், நேற்று (ஜன.9) பயணிகள் ரயில் ஒன்று உள்ளே வந்து கொண்டிருந்தது. அப்போது, வண்டியில் இருந்து ஒரு பெண் ஒருவர் கால் தவறி பிளாட்பாரத்தில் விழுந்தார்.
இதையடுத்து, அங்கு பணியில் ஈடுபட்டிருந்த இரு ரயில்வே காவலர்கள் சற்றும் தாமதிக்காமல், ரயிலுக்கும் பிளாட்பாரத்திற்கும் இடையில் சிக்கி இருக்க வேண்டிய அந்த பெண்ணை நொடிப்பொழுதில் வெளியே இழுத்து காப்பாற்றினர்.
இந்த வீடியோ தற்போது சமூக தளங்களில் வைரலாகி வருகிறது. தவிர, காப்பாற்றிய அந்த இரு காவலர்களுக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.







