அமைச்சர் பொன்முடி மீது சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் விசாரணையை செப்டம்பர் 14ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சொத்துக் குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை தானே விசாரிப்பதா? அல்லது வேறு நீதிபதிக்கு மாற்றுவதா என்பது குறித்து முடிவெடுப்பதற்காக, வழக்கின் விசாரணையை செப்டம்பர் 14ம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தள்ளிவைத்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சொத்துக் குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடியை விடுதலை செய்து வேலூர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யும் வகையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு
எடுத்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் மீண்டும் விசாரணைக்கு வந்த போது,
லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா,
விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேலூர் நீதிமன்றத்துக்கு மாற்றியது
தொடர்பாக உயர்நீதிமன்ற நிர்வாக முடிவுகள் குறித்து உத்தரவில் கூறியுள்ளதால்,
வழக்கில் உயர்நீதிமன்ற பதிவுத்துறையை சேர்த்திருக்க வேண்டும் என்றார்.
மேலும், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்கும் முன் லஞ்ச ஒழிப்புத்
துறை தரப்பின் விளக்கத்தை கேட்கவில்லை என்றும், கடந்த ஜூன் மாதம் தான் வேலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், மேல் முறையீடு செய்ய அவகாசம் இருந்ததை கருத்தில் கொள்ளாமல், முன் முடிவெடுத்து இந்த வழக்கு விசாரணைக்கு
எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுக்கும் வழக்குகளை தலைமை நீதிபதிக்கு
பரிந்துரைக்க வேண்டும் எனவும், எந்த நீதிபதி விசாரிப்பது என தலைமை நீதிபதி
தான் முடிவெடுப்பார் என்பதால் விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
பொன்முடி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவும், லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் முன் வைத்த வாதத்தையே வலியுறுத்தினார். மேலும் அவர், வேலூர் நீதிமன்றத்துக்கு மாற்றிய உயர்நீதிமன்ற நிர்வாக முடிவுக்கும், தங்களுக்கும்
எந்த தொடர்பும் இல்லை என்றும், வழக்கு தொடர்பான ஆவணங்கள் வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன் வந்து
எடுத்த வழக்கை தானே விசாரிப்பதா? அல்லது வேறு நீதிபதிக்கு மாற்றுவதா என்பது
குறித்து அடுத்த வாரம் முடிவெடுப்பதாக கூறி, விசாரணையை செப்டம்பர் 14ம்
தேதிக்கு தள்ளிவைத்தார்.