சிங்கப்பூரில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்தினம் அறிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் அதிபர் ஹலிமா யாக்கோப் பதவிக்காலம் வரும் செப்டம்பர் 13-ம் தேதியுடன் முடிவடைகிறது. 68 வயதாகும் ஹலிமா யாக்கோப் அந்நாட்டின் 8வது அதிபரும், முதல் பெண் அதிபருமாவாா். இவர் கடந்த மே 29-ம் தேதி அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்தார்.
இந்த நிலையில் மக்கள் செயல் கட்சியின் மூத்த அமைச்சரான தர்மன் சண்முகரத்தினம், அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். 66 வயது நிரம்பிய இவர் அரசு வங்கியில் பணியைத் தொடங்கினாா். பின்னர் சிங்கப்பூா் நிதி ஆணையத்தின் தலைவராக பதவி வகித்துள்ளாா். அதனை தொடர்ந்து துணைப்பிரதமர், நிதியமைச்சர், கல்வி அமைச்சர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார்.
இவர், அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்சி, அமைச்சர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அந்நாட்டு பிரதமர் லீ சியன் லூங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கடிதத்துக்கு பதிலளித்துள்ள பிரதமா் லீ சியன் லூங், ”இந்தத் தோ்தலில் தா்மன் சண்முகரத்தினம் வெற்றி பெற்று தனது பணியை திறம்படவும், சுதந்திரமாகவும் ஆற்றுவாா் என்ற நம்பிக்கை உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த தோ்தலில் போட்டியிடுவதற்கான ஆதரவு சில மாதங்களாக சிங்கப்பூா் மக்களிடையே பெருகி வருகிறது என்றும் தோ்தலில் போட்டியிடுவது என்ற கடினமான முடிவை கவனமாக எடுத்துள்ளேன் என்று தா்மன் சண்முகரத்தினம் குறிப்பிட்டுள்ளாா்.







