தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்துவருவதன் காரணம் குறித்து கண்டறிய ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
உலக கல்லீரல் அழற்சி தினந்தையொட்டி சென்னை எழும்பூர் தாய்-சேய் நல மருத்துவமனையில் கருவில் உள்ள குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை பரிசோதனையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் அமைச்சர் சேகர் பாபு, எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் சென்னை, கன்னியாகுமாரி, கோவை, ஈரோடு போன்ற மாவட்டங்களில் கொரோனா தொற்று உயர்ந்துள்ளதற்கான கரணங்களை கண்டறிய அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் கேரளாவில் தொற்று அதிகரித்ததற்கு வீடுகளில் தங்கி சிகிச்சை பெருவது தான் காரணம் எனவும் தமிழ்நாட்டில் தொற்று பாதித்தவர்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தமிழ்நாட்டில் தற்போது கொரோனா தொற்று சற்று அதிகரித்து வரும் சூழல் இருப்பதால், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கான கால நீட்டிப்பு குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார் எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.








