சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அமைச்சர் கீதாஜீவன் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மகளிர் நலன் மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவனின் தந்தை என்.பெரியசாமி, கடந்த 1996- 2001-ல் எம்.எல்.ஏவாக இருந்த போது கீதாஜீவன் தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவராக இருந்தார். வருமானத்திற்கு அதிகமாக ரூ.2,31,87,000 மதிப்பிலான சொத்து சேர்த்ததாக பெரியசாமி உள்ளிட்ட குடும்பத்தினர் 6 பேர் மீது கடந்த 2002-ல் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். கடந்த 2003ல் இது குறித்து குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கு தூத்துக்குடி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளிகளாக பெரியசாமி, எபனேசர், ராஜா, ஜெகன், ஜீவன் ஜேக்கப், கீதாஜீவன் ஆகியோர் சேர்க்கபட்டுள்ளனர். இதில் கடந்த 2017ம் ஆண்டு என் பெரியசாமி உடல் நலக்குறைவினால் மறைந்தார். இதற்கிடையில், இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி தூத்துக்குடி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார் கீதாஜீவன். ஆனால், அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று மாவட்ட நீதிமன்றத்தில் நீதியரசர் குருமூர்த்தி முன்னாள் எபனேசர் அம்மாள், ராஜா, மேயர் ஜெகன், ஜீவன் ஜேக்கப், அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் ஆஜரானார்கள். தொடர்ந்து வழக்கு தொடர்பாக போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் 5 பேரும் விடுதலை செய்யபடுவதாக நீதிபதி தீர்ப்பளித்தார்.
தொடர்ந்து நீதிமன்றத்தில் இதுந்து வெளியே வந்த அமைச்சர் கீதாஜீவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த 1996 முதல் 2001 வரையில் நடந்த திமுக ஆட்சியில் அளவுக்கு அதிகமாக சொத்து குவித்ததாக அதிமுகவினர் காழ்ப்புணர்ச்சி காரணமாகவும், களங்கம் விளைவிக்கும் வகையிலும் எனது குடும்பத்தினர் மீதும் என் மீதும், வழக்குபதிந்ததனர். இந்த வழக்கு 21 ஆண்டுகள் நடைபெற்ற நிலையில் இன்று விடுதலை என தீர்ப்பு அளிக்கபட்டுள்ளது. நீதி கிடைத்துள்ளது. நியாயம் விளங்கியுள்ளது என்று கூறினார்.







