’ஆளுநர் முழுக்க முழுக்க அரசியல் தான் செய்கிறார்’ – அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி முழுக்க முழுக்க அரசியல் தான் செய்கிறார் என தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் குற்றம் சாட்டியுள்ளார். வேலூர் பொன்னை ஆற்றின் குறுக்கே சுமார் ரூ.40 கோடி மதிப்பீட்டில் புதிய மேம்பால…

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி முழுக்க முழுக்க அரசியல் தான் செய்கிறார் என தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

வேலூர் பொன்னை ஆற்றின் குறுக்கே சுமார் ரூ.40 கோடி மதிப்பீட்டில் புதிய மேம்பால கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. அதனை தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து பொன்னையில், தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் அவர் கலந்துகொண்டார்.

இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் துரைமுருகன், ”தமிழகத்தில் நிதிநிலை கடும் நெருக்கடியில் உள்ளது. நாங்கள் பதவி ஏற்ற பின்னர் அதனை கொஞ்சம் கொஞ்சமாக சமாளித்து வருகிறோம். தமிழகத்தை நிதி நெருக்கடியிலிருந்து மீட்கும் வரையில் பணிகள் படிப்படியாக தான் நடக்கும். அதற்கு கட்சியினர் ஒத்துழைப்பு நல்க வேண்டும்” என்று பேசினார்.

நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன், ”தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் நேற்றுடன் காலாவதியானது. தற்போது மசோதாவுக்காவது ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் என எதிர்ப்பார்க்கிறோம். ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என்றால், அதன் பின்னர் எங்களுடைய நிலைப்பாடு என்ன என்பது தெரியும். தமிழக ஆளுநர் முழுக்க முழுக்க அரசியல் தான் செய்கிறார்” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.