பள்ளிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்தக்கூடாது என அமைச்சர் அன்பில் மகேஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஸ், “மாணவர்களுக்கு வகுப்பறையில் செல்போன்கள் கண்டிப்பாக அனுமதி கிடையாது. அப்படி மீறி எடுத்து வந்தால் கண்டிப்பாக அதனை பறிமுதல் செய்வோம். மீண்டும் அது கொடுக்கப்பட மாட்டாது. கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவர்கள் அதிகமாக செல்போன்களை பயன்படுத்திய காரணத்தினால் நிறைய சிரமங்கள் ஏற்பட்டுள்ளது. ஆனால் தற்போது அதனை சரி செய்வதற்கு வகுப்பறைகளில் பாடம் எடுப்பதற்கு முன்பாக அவர்களுக்கு புத்துணர்வு அளிக்கப்பட்டு பின்னர் தான் வகுப்புகள் துவக்கப்படுகிறது” என்றார்.
நீட் தேர்வை பொறுத்தவரை தொடர்ந்து சட்டப்பூர்வமாக அழுத்தத்தைக் கொடுத்து வருகிறோம் என்ற அமைச்சர், “இதன் காரணமாக தான் நம் ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு சட்டமன்ற தீர்மானங்களை அனுப்பி வைத்துள்ளார். கண்டிப்பாக இதில் தமிழக முதலமைச்சர் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.
மேலும், “இரவு 12.30 மணி வரை கூட காத்திருந்து அரசுப் பள்ளிகளில் மாணவர்களை பெற்றோர்கள் சேர்த்து வருகிறார்கள். பெற்றோர்கள் பொருளாதார ரீதியாக கடந்த 2 ஆண்டுகளாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதால் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு அல்லது பெற்றோர்களுக்கு எந்த அழுத்தமும் கொடுக்கக்கூடாது” என்றும் கூறினார்.







