கோவில்பட்டி அருகே கோயில் கும்பாபிஷேகத்தை காண ஹெலிகாப்டரில் வந்த குடும்பத்தினரை பார்த்து அக்கிராம மக்கள் வியப்படைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள தெற்கு தீத்தாம்பட்டி கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன், ஸ்ரீ கன்னி விநாயகர், ஸ்ரீ சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானை திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி காலையில் சிறப்பு யாக பூஜைகளும், சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடைபெற்றது. இதன் பின்னர் புனித நீர் எடுத்துச் செல்லப்பட்டு விமான கோபுர கலசங்களுக்கு ஊற்றப்பட்டு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. இந்த மகா கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வதற்காக அதே கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் என்பவர் குடும்பத்துடன் ஹெலிகாப்டரில் வந்து அசத்தினார். நடராஜனின் தந்தை பாலசுப்பிரமணியன். இவர்களது சொந்த ஊர் தெற்கு தீத்தாம்பட்டி. கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு பாலசுப்பிரமணியன் தனது குடும்பத்துடன் கும்மிடிப்பூண்டியில் வசித்து வருகிறார். பாலசுப்ரமணியன் மற்றும் அவரது மூத்த மகன் நடராஜன் ஆகியோர் இரும்பு கடை வைத்துள்ளனர். மற்றொரு மகன் ராஜதுரை ஜவுளிக்கடை வருகிறார். அவருடைய மூத்த மகன் நடராஜனுக்கு சிறுவயது முதலே ஹெலிகாப்டரில் செல்ல வேண்டும் என்பது அவரது ஆசை. அதே போன்று நடராஜன் மகன் மோகித்க்கும் ஹெலிகாப்டரில் செல்ல ஆசை இருந்தது.
இதையெடுத்து மகன் மற்றும் பேரனின் ஆசையை நிறைவேற்ற கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு ஹெலிகாப்டரில் செல்ல பாலசுப்பிரமணியன் முடிவு செய்தார். இதற்காக பெங்களூரில் உள்ள தனியார் ஹெலிகாப்டர் நிறுவனம் மூலமாக ஏற்பாடு செய்தார். அதன் படி நடராஜன், அவரது மனைவி சுந்தரவள்ளி, அவரது மகன் மோகித், சகோதரர் ராஜதுரை, உறவினர் அசோக் ஆகிய 5 பேரும் கும்மிடிப்பூண்டியில் இருந்து பெங்களூருக்கு காரில் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக தெற்கு தீத்தாம்பட்டிக்கு வந்தனர். ஊருக்கு வந்து ஹெலிகாப்டர் 2முறை சுற்றியதை அக்கிராம மக்கள் ஆர்வத்துடன் பார்த்தது மட்டுமின்றி செல்ஃபி எடுத்துக் கொண்டனர். நடராஜன் தனது குடும்பத்துடன் ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் முடித்துவிட்டு பின்னர் அதே ஹெலிகாப்டரில் ஊருக்கு திரும்பினார்.