சென்னை ரயில் நிலையங்களில் காத்திருக்கும் வடமாநில தொழிலாளர்கள்: சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்படுமா?

தமிழகத்தில் இரவு ஊரடங்கு நாளை தொடங்க உள்ள நிலையில், தமிழகத்தில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல, சென்னை ரயில் நிலையத்தில் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து…

தமிழகத்தில் இரவு ஊரடங்கு நாளை தொடங்க உள்ள நிலையில், தமிழகத்தில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல, சென்னை ரயில் நிலையத்தில் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. நாட்டின் எல்லா மாநிலங்களில் கொரோனா வேகமாகப் பரவிவருகிறது. தினமும் லட்சக்கணக்கானோருக்குப் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் டெல்லி, பஞ்சாப், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு ஊரடங்கு அமலில் உள்ளது . மேலும் நாளை முதல் தமிழகத்திலும் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

இந்நிலையில் சென்ற ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த வருடம் மார்ச் மாதத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது, புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்தே சொந்த ஊருக்குச் சென்றனர். பல ஆயிரம் கிலோமீட்டர்கள் சைக்கிள் மிதித்து தனது தந்தையைக் கொண்டு சென்ற சிறுமிக்குச் சர்வதேச அளவில் பாராட்டு குவிந்தது. ரயில் நிலையத்தில், அம்மா மரணமடைந்தது தெரியாமல் அவரது போர்வையை குழந்தை இழுக்கும் செய்தி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

குறைந்த ஊதியத்திற்காக அதிக நேரம் உழைக்கும் புலம்பெயர் தொழிலாளர்களை அரசு கண்டுகொள்ளவில்லை என்று சர்வதேச அளவில் இந்தியா மீது விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் இந்த ஆண்டும் மீண்டும் அதே சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

இதனால் தமிழகத்தில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் அவரது குடும்பத்தினருடன், சொந்த ஊர்களுக்குச் செல்ல சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வரிசையில் காத்திருக்கின்றனர். வடமாநிலத்திற்குச் செல்லும் ரயிலானது காலை 7 மணி மற்றும் 11 மணி என்று இரண்டு ரயில்கள் தினமும் செல்கிறது. பணியிடங்களில் 50 சதவிகிதம் ஊழியர்கள் பணிபுரிய அனுமதி அளிப்பதால், தமிழக அரசு சார்பில் சிறப்பு ரயில்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

மேலும் இந்தியா முழுவதிலும் இரவு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் புலம் பெயர் தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயில்கள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.