’எம்ஜிஆர், ஜெயலலிதா அருளால் சாதகமான தீர்ப்பு கிடைத்துள்ளது’ – இபிஎஸ் நெகிழ்ச்சி

எம்ஜிஆர், ஜெயலலிதா அருளால் உச்சநீதிமன்றத்தில் தங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தி.குன்னத்தூரில், ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் மகள் பிரியதர்ஷினி…

எம்ஜிஆர், ஜெயலலிதா அருளால் உச்சநீதிமன்றத்தில் தங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தி.குன்னத்தூரில், ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் மகள் பிரியதர்ஷினி – முரளி தம்பதி உட்பட 51 ஜோடிகளுக்கு சமுதாய திருமண விழா, அதிமுக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.

இந்த திருமண விழாவிற்கு மதுரை விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக வந்த எடப்பாடி பழனிச்சாமி, தி.குண்ணத்தூரில் உள்ள அம்மா கோயிலில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவரோடு அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட அதிமுக மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதையும் படியுங்கள் : ’ஓபிஎஸ்-ன் அனைத்து முயற்சியும் தோல்வி அடைந்துவிட்டது’ – உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பின் இபிஎஸ் பேட்டி

திருமணங்களை நடத்தி வைத்த பின், விழா மேடையில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, ”இந்த திருமண நிகழ்ச்சி ஒரு அற்புதமான நிகழ்ச்சி. எல்லையில்லாத மகிழ்ச்சியில் உள்ளேன். உச்சநீதிமன்ற தீர்ப்பு இன்று என தெரிந்தபின் ஒருவித அச்சம் இருந்தது. நிம்மதியே இல்லை. இரவில் உறக்கமும் வரவில்லை. உதட்டளவில்தான் சிரிப்பு இருந்தது. உள்ளத்தில் இல்லை.

இங்கு வந்த பின், அம்மா கோயிலில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை
அணிவித்து விட்டு திருமண மேடைக்கு செல்லலாம் என ஆர்.பி.உதயகுமார் சொன்னார்.
இருவரது சிலைக்கும் மாலை அணிவித்துவிட்டு நல்ல தீர்ப்பு கிடைக்க வேண்டும் என
வேண்டினேன். தெய்வத்தின் அருள் பெற்ற, சக்தி மிக்க தலைவர்கள் இருவருக்கும் மாலை அணிவித்து விட்டு, உணவருந்தச் செல்லும் போதே எங்களுக்கு சாதகமான தீர்ப்பு என்ற நல்ல செய்தி கிடைத்துவிட்டது.

அதிமுகவை அழிக்க நினைக்கும் சில எட்டப்பர்கள் மற்றும் திமுகவின் B- டீமாக உள்ளவர்களின் முகத்திரைகள் இன்று கிழிக்கப்பட்டுள்ளது. இனிமேல் அதிமுக மூன்றாக உள்ளது, நான்காக உள்ளது என சொல்ல வேண்டாம். ஒன்றாக உள்ளது என்றே சொல்லுங்கள்.

ஈரோட்டில் நியாயமான முறையில் தேர்தல் நடைபெறவில்லை. ஏழை வாக்காளர்களை ஆடு, மாடுகளைப் போல் அழைத்து சென்று அடைத்து வைத்துள்ளனர். ஜனநாயக குற்றத்தை திமுக அரங்கேற்றி வருகிறது. திருமங்கலத்தில் முதல் ஃபார்முலாவை கொண்டு வந்த திமுக, இன்று இரண்டாவது ஃபார்முலாவை ஈரோட்டில் அரங்கேற்றியுள்ளது” என்று குற்றம்சாட்டினார்.

இதுகுறித்த முழு வீடியோவைக் காண : 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.